தர்மத்தை நிலைநாட்ட மீண்டும் வருவேன்.. இறைவன் அளித்திருக்கும் வாக்குறுதியை நினைவூட்டும் தீபாவளி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2022 07:10
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே” என்று பகவான் கூறியுள்ளார். இதன் பொருள் அறத்தை காக்கவும் நீதியை நிலைநாட்டவும் மீண்டும் மீண்டும் அவதரிப்பேன் என்பதாகும்.
மனித முயற்சி என்பது ஓரளவுக்கே பயன்தரும். எவ்வளவு விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் மனிதன் எல்லாவற்றையும் சாதிக்க முடிவதில்லை. முடியாது என்ற நிலை ஏற்படும்போது ஒவ்வொரு மனிதனும் இறைவனை சரணடைகிறான். “நிர்கதியாக நிற்கிறேன் இறைவா! என்னை காப்பாற்று” என்று இரைஞ்சுகிறான். அவனுக்காக ஆண்டவனும் இறங்கி வந்து அவனைக்காப்பாற்றுகிறார். தனி மனிதனுக்கே இத்தனை சவாலாக உலகம் இருக்கும்போது, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு எதிரான அநீதிகள் துன்பங்கள் விளையும்போது நாம் அந்த இறைவனை சரணடைய மறந்தாலும் அவன் தானாகவே இறங்கி வந்து, அவதரித்து ஒட்டுமொத்த சமூகத்திற்கு எதிரான தீயசக்தியை அழித்து நீதியையும் தர்மத்தையும் நிலை நாட்டுவார்.
இதை அசுரஸம்ஹாரம் என இந்துமத புராணங்கள் கூறுகின்றன. இன்று எத்தனையோ அசாதாரணமான சூழல்களை மனிதகுலம் சந்தித்து வருகிறது. மக்களின் புண்ணியம் அதிகப்படும்போது நன்மைகளும் மிகுதியாக நடக்கும். மக்களின் பாவம் அதிகமாகும்போது துன்பங்கள் மிகுதியாகும். இரணியன் என்பவன் ஆணவமிகுதியால் தனக்குமேல் கடவுள் என்ற ஒரு சக்தி கிடையாது என்று எண்ணினான். பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை அழித்து தெய்வசக்தி வலியது என்று உணர்த்தினார். சூரபத்மன் ஆயிரம் அண்டங்களுக்கும் தாமே அதிபதி என்ற இருமாப்பில் தேவர்களையும் சிறையிலடைத்தான். இறைவன் முருகப்பெருமானாக அவதரித்து அவன் ஆணவத்தை அழித்து சேவலும் மயிலுமாக ஆக்கிக்கொண்டார். இதெல்லாம் எதற்காக சொல்லப்பட்டுள்ளது என்றால் கடுமையான சூழல் தரும் கஷ்டங்களினால் யாரும் மனம் சோர்ந்துவிடக்கூடாது. நரகாசுரனுடைய வரலாறு இதை உணர்த்துகிறது. தீயசக்தி அழிந்து பூவுலகிற்கு நன்மை விளைந்த நிகழ்ச்சியை மறவாமல் கொண்டாடி ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். இவ்வளவு அழகான எளிமையான தத்துவங்கள் இந்து மதத்தில்தான் கூறப்படுகின்றன. இன்று நாம் துன்பத்திலிருக்கிறோம் என்பதை மறந்து பண்டிகைகள் கொண்டாடினால் மனம் உறுதி பெறும். “உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா” என அழைக்கிறார் பாரதியார். எனவே “ தர்மத்தை நிலைநாட்ட நான் மீண்டும் அவதரிப்பேன் “ என்ற இறைவனின் வாக்குறுதியை எண்ணியவாறு ,எண்ணெய் ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து தீபங்கள் ஏற்றி, இறைவனை வழிபட்டு குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடுவோம். எல்லாம் வல்ல ஆண்டவன் நம்மைநோக்கி பயணம் துவங்கிவிட்டார் என்ற தன்னம்பிக்கை உலகெங்கும் ஒளிரும். ஏ. வி. சுவாமிநாத சிவாசாரியார் மயிலாடுதுறை.