இடியும் நிலையில் 17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வரன் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2022 09:10
கூடலுார்: கூடலுாரில் 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஈஸ்வரன் கோயில் முழுமையாக இடிவதற்குள் சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலுார் தாமரைக்குளம் ரோட்டில் உள்ளது மிகவும் பழமை வாய்ந்த 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வரன் கோயில். இக்கோயிலை பூஞ்சாறு அரச வம்சத்தை சேர்ந்த பூஞ்சாறு தம்பிரான் கட்டியதாக வரலாறு. இக்கோயிலுக்கு அருகில் தெப்பக்குளமும் இதற்குச் சொந்தமான நிலமும் உள்ளது. போர் நடந்த போது தம்பிரான் குடும்பத்தினர்கள் இப்பகுதியில் இருந்து வெளியேறிச் சென்ற பின் இக்கோயிலையும் நிலத்தையும் அங்கு பூஜை செய்த சாமி என்பவரின் குடும்பத்தினர் பரம்பரையாக கவனித்து வந்துள்ளனர். இக்கோயில் முறையாக பராமரிக்கப்படாததால் கோபுரம் மற்றும் கட்டங்கள் அனைத்தும் சேதம் அடைந்து இடியும் நிலையில் உள்ளது. இக்கோயிலை சீரமைக்க யாரும் முன் வரவில்லை. தமிழர்களின் கலை திறனை பிரதிபலிக்கும் சிற்பங்களுடன் கோயில் கோபுரம் அமைந்துள்ளது. வாரத்திற்கு இரண்டு முறை பக்தர்கள் இக்கோயிலுக்கு சென்று வணங்கி வருகின்றனர். ஆனால் ஆபத்தான நிலையில் உள்ள கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்கு தயக்கம் காட்டியுள்ளனர். இக்கோயிலை சீரமைத்து வழிபாடு நடத்தினால் கூடலுார் பகுதியில் வளம், செல்வம் பெருகும் என்பது ஐதீகம் என கூறப்படுகிறது. இந்து சமய அறநிலைத்துறை கோயிலை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. பழமையான இக்கோயில் முழுமையாக இடிவதற்குள் சீரமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் விருப்பம்.