பதிவு செய்த நாள்
28
அக்
2022
03:10
காரமடை: காரமடை அருகே உள்ள குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெற்று வருகிறது.
காரமடை அருகே, மருதுார் ஊராட்சி குருந்தமலையில், குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த, 25ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை, 11:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். அதன் பின் வள்ளி, தெய்வானை சமேதராக, கல்யாண சுப்பிரமணி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். அதன் பின் விநாயகர், வீரபாகு, அஸ்திரதேவர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் செய்தனர். வரும், 29ம் தேதி காலை சக்திவேல் வழங்கும் விழாவும், 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு கந்த சஷ்டி மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற உள்ளது.
அதை தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹாரம் மலையை சுற்றி நடைபெற உள்ளது. 31ம் தேதி காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை, 3:00 மணிக்கு திருவீதி உலாவும், 5:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு அபிஷேகமும், மஞ்சள் நீர் உற்சவமும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
குமரன்குன்று : குமரன்குன்று கோவிலில், கந்த சஷ்டி விழா நடக்கிறது. குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில், 61ம் ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் துவங்கியது. காலை, 9:30 மணிக்கு, வள்ளி தெய்வானை, சமேதர கல்யாண சுப்பிரமணியசாமிக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்றும், நாளையும், காலை 9:30 மணிக்கு, அபிஷேக பூஜை நடக்கிறது. வரும், 30ம் தேதி காலை, 9:30 மணிக்கு நாம ஜெபம் நடக்கிறது. மாலை, 3:30 மணிக்கு கிரிவலம் வருதலும், சூரசம்ஹார விழாவும் நடக்கிறது, இரவு துவங்கி, மறுநாள் காலை வரை குமரன் குன்று குழுவின் பஜனை நடக்கிறது. 31ம் தேதி காலை, 8:00 மணிக்கு தெய்வானை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
ஜோதி பாலமுருகன் கோவில்: கந்த சஷ்டி விழாவையொட்டி, ஜோதிபுரம் ஜோதி பாலமுருகன் கோவிலில் இம்மாதம், 25ம் தேதி முதல், 30ம் தேதி வரை தினசரி சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்மாதம், 30ம் தேதி பாலமுருகன் திருக்கல்யாண நிகழ்ச்சி, திருவீதி உலா ஆகியன நடக்கின்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.