பதிவு செய்த நாள்
28
அக்
2022
03:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று சுப்ரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வரும், 30ம் தேதி சூரசம்ஹார பெருவிழாவும், 31ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 1ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.
* பொள்ளாச்சி கெட்டிமல்லன்புதுார் பாலதண்டாயுதபாணி கோவிலில், மூன்றாம் நாளான நேற்று சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
* புளியம்பட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 10ம் ஆண்டு கந்த சஷ்டி விழா, கடந்த, 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு உற்சவருக்கு, சிறப்பு புஷ்பாபிேஷகம், சிறப்பு அலங்கார வழிபாடும்; மாலை, 7:00 மணிக்கு கோவிலுக்குள் உற்சவர் திருவீதி உலாவும் நடந்தது. வரும், 30ம் தேதி மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹார பெருவிழா நடக்கிறது. 31ம் தேதி காலை சுவாமிக்கு திருக்கல்யாணமும், மதியம் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கந்த சஷ்டி திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.