பதிவு செய்த நாள்
29
அக்
2022
07:10
பல்லடம்: பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி மேற்கொள்வதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், பிரசித்தி பெற்ற பொங்காளியம்மன் கோவில் உள்ளது. அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான இக்கோவில், நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. இதற்கிடையே, கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அறநிலைய துறை அதிகாரிகள், கோவில் கமிட்டி நிர்வாகிகள் ஆகியோர், திருப்பணி மேற்கொள்வது குறித்து இரண்டு கட்டமாக ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, திருப்பணிகளை விரைந்து மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, கோவில் கோபுரங்கள், சுற்றுச்சவர் உள்ளிட்டவை வர்ணம் பூசுதல், கோவில் பிரகாரத்தில் தளம் அமைத்தல், பழைய கட்டடம் அகற்றுதல் என, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவற்றை கமிட்டி நிர்வாகிகள் தனித்தனியே பொறுப்பெடுத்து மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளனர். முன்னதாக, திருப்பணிகள் துவங்குவதற்கான பூமிபூஜை நேற்று காலை நடந்தது. அறநிலைய துறை அலுவலர்கள், கோவில் கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூமி பூஜையை தொடர்ந்து, திருப்பணிகள் நேற்று முதல் துவங்கின.