பதிவு செய்த நாள்
29
அக்
2022
07:10
அன்னூர்: மொபைல், இன்டர்நெட் என, மூழ்கியுள்ள இளைஞர்கள் பலர் தற்போது பஜனையில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இளைஞர்கள் எந்நேரமும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், டிக் டாக் என மணிக்கணக்கில் மொபைலில், சமூக வலைதளங்களில் செலவழிக்கின்றனர். விளையாடுவது, நண்பர்களுடன் பேசுவது ஆகியவை குறைந்து விட்டது என பெற்றோர் கவலைப்படுகின்றனர். இந்நிலையில் அன்னூர் தாலுகாவில் ஐ.டி., நிறுவன ஊழியர்கள், ஆடிட்டர்கள், இளம் தொழிலதிபர்கள் என பலர் பஜனைகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அச்சம் பாளையம் பஜனை பாடகர் சண்முகம் கூறியதாவது : முன்பு கோவில்களில் பஜனை நடப்பது குறைவாக இருந்தது. சமீப காலங்களில் பஜனை நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. ஐ.டி. நிறுவன ஊழியர்கள், ஆடிட்டர்கள் என இளைஞர்கள் பலரும் ஆர்வமாக பஜனை பாடுவதற்கு வருகின்றனர், பஜனையின் போது பக்தி பாடலுக்கு நடனமாடவும் ஆர்வமாக வருகின்றனர். மிருதங்கம் வாசிக்க கற்றுக் கொள்கின்றனர். அன்னூர் பகுதியில் மட்டும் 15க்கும் மேற்பட்ட பஜனை குழுக்கள் உள்ளன. வருமான நோக்கம் இல்லாமல் பக்தி பாடல்கள் இசைப்பதையே நோக்கமாகக் கொண்டு இந்த குழுக்கள் செயல்படுகின்றன. எங்கு பஜனை நடத்தினாலும் குறைந்தது 50 பேர் கூடுகின்றனர். அச்சம்பாளையம் செல்வ விநாயகர் கோவில், ஓரைக்கால் பாளையம் பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சனி தோறும் பஜனை நடக்கிறது. நல்லி செட்டிபாளையம் விநாயகர் கோவிலில், தேய்பிறை சதுர்த்திக்கும், செலம்பராயன்பாளையம், சிவன் கோவிலில் பவுர்ணமி தோறும் பஜனை நடக்கிறது. நள்ளிரவு வரை நடைபெறும் பஜனையில் ஆர்வமாக அமர்ந்து பக்தி பாடல்கள் பாடி நடனம் ஆடுகின்றனர். வாரத்துக்கு வாரம் பங்கேற்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.