பதிவு செய்த நாள்
27
ஆக
2012
10:08
பழநி: பழநி அருகே, 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி, வரலாற்றுத் துறை தலைவர் ரவிச்சந்திரன், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் நந்திவர்மன், பேராசிரியர் மகுடீஸ்வரன் ஆகியோர், கள்ளிமந்தையம் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். கள ஆய்விற்கு பின் நந்திவர்மன், ரவிச்சந்திரன் கூறியதாவது: இரண்டரை அடி உயரமும், இரண்டடி அகலமும் உள்ள முக்கோண வடிவில் உள்ள, 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீரன் ஒருவன், வலது கையில் கொடுவாளை ஓங்கிய நிலையில் வைத்தும் நீண்ட தடியுடனும் காணப்படுகிறான். தீப்பாச்சி உடையுடன் இடுப்புப் பட்டை அணிந்து, குறுவாள் தொங்க விடப்பட்டுள்ளது. வலது பக்கம் வேட்டை நாய் வீரனுடன் ஓடி வருவது போல் செதுக்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில் ஊரைக் காப்பதற்காகவும், கால்நடைகளை விலங்குகளிடம் இருந்து காப்பதற்காகவும் உயிர்நீத்த வீரர்களுக்கு, நடுகல் வைத்து வழிபடுவது வழக்கம். தற்போது கள்ளிமந்தையம் என்று அழைக்கப்படும் இந்த ஊர், முன் மந்தை (ஆடு, மாடுகள் தங்குமிடம்) யாக இருந்திருக்க வேண்டும். இவ்வீரன் இம்மந்தைகளை காவல் காத்துக் கொண்டிருக்கும் போது, ஆடுமாடுகளை கவர வந்த கூட்டத்தோடு ஏற்பட்ட சண்டையில் உயிர் இழந்திருப்பான். இவனோடிருந்த வேட்டை நாயும் கொல்லப்பட்டுள்ளது. இவ்வீரனின் நினைவை போற்றும் வகையில் நடுகல் அமைத்திருக்கலாம். இந்த நடுகல் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் யானை கட்டும் கல் ஒன்றும் நடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.