கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2022 12:10
கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவில் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் செவ்வாய்கிழமை முதல் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது.இதனையொட்டி தினசரிகாலை மற்றும் மாலை வேலைகளில் ஆறுமுக சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. இன்று(ஞாயிற்றுக் கிழமை)மாலை வீரவாகுத்தேவர்கள் கம்பம் ஏறும் நிகழ்ச்சியும்,இரவு சூரபதுமன் வதம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அறுமுக சுவாமிகள் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மாலை 7 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு நித்ய பூஜைகளும்,8 மணி அளவில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிகளுக்கு சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது.இரவு உற்சவ மூர்த்தி சுவாமிகள் வீதியுலாவும்,வீரவாகுத் தேவர்கள் ஊர்வலமும் நடைபெற்றது.திருவாசக முற்றோதல்,கந்தபுராணம் வாசிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா வெற்றிவேல் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்தனர்.