மயிலாடுதுறை: கந்த சஷ்டி மற்றும் துலா மாதத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் வேத பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவேரி கரையோர நகரமான மயிலாடுதுறையில், துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். பாடல் பெற்ற சிவாலயங்கள் மற்றும் நகரில் உள்ள கோவில்கள், திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில் ஆகியவற்றில் இந்த மாதம் முழுவதும் சுவாமி புறப்பாடு தீர்த்தவாரி, திருத்தேர், திருக்கல்யாணம் உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். பக்தர்கள் காவிரியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வர். இந்த மாதத்தில் நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வேத பாராயணங்கள் செய்யப்படும். வேத பாராயணத்துக்குரிய ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம், நாராயண ஸூக்தம், பாக்ய ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம் மற்றும் அனைத்து மந்திரங்களும் நான்கு நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தொடர்ந்து நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சேந்தங்குடி ராகவேந்திரர் ஆராதனை கமிட்டி சார்பில் உலக நன்மை வேண்டியும், கந்த சஷ்டி மற்றும் துலா மாதத்தை முன்னிட்டு வேத பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நான்கு நாட்களாக சேந்தங்குடி அக்ரஹாரத்தில் நடைபெற்று வருகிறது. கிரி தலைமையிலான விழா குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.