பதிவு செய்த நாள்
27
ஆக
2012
10:08
மோகனூர்: கீழப்பேட்டப்பாளையம் அருள் மாரியம்மன், விநாயகர் கோவிலில், செப்டம்பர் 2ம் தேதி, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது.மோகனூர் யூனியன், கீழப்பேட்டப்பாளையத்தில் அருள் விநாயகர், அருள் மாரியம்மன், மதுரைவீரன் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேக விழா நடந்தது. அதை தொடர்ந்து, கோவில் புதுப்பிக்கும் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கியது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 2ம் தேதி, கோவில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 31ம் தேதி காலை 7 மணிக்கு, கணபதி, மகா மற்றும் நவக்கிரக ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது.செப்டம்பர் 1ம் தேதி காலை 7.30 மணிக்கு, காவிரி ஆற்றுக்குச் சென்று தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. மாலை 5 மணிக்கு, வாஸ்து சாந்தி, முளைப்பாரி அழைத்தல், அங்குரார்ப்பணம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், முதல்கால யாக பூஜை, தீபாராதனை, கோபுர கலசம் வைத்தல் மற்றும் பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. செப்டம்பர் 2ம் தேதி காலை 7.30 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி, மகா தீபாராதனையும், காலை 9 மணிக்கு, யாக சாலையில் இருந்து சக்தி கலசங்கம் புறப்பட்டுச் செல்கிறது. தொடர்ந்து, அருள் விநாயகர், மாரியம்மன், மதுரை வீரன் ஆகிய ஸ்வாமிக்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.அதை தொடர்ந்து, அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், ஸ்வாமி தரிசனம் நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா, விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.