திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: இரவில் திருக்கல்யாணம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2022 08:11
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் நேற்று இரவு திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலையில் நடந்தது. திருவிழாவில் 7ம் நாளில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5:30 க்கு மேல் தெய்வானை அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி தவசு காட்சிக்கு புறப்பட்டார். முக்கிய வீதிகள் வழியாக தெப்பக்குளம் அருகே முருகா மடத்திற்கு வந்து சேர்ந்தார். நேற்று பகல் 2:30 மணிக்கு சுவாமி குமர விடங்க பெருமான் தபசு காட்சிக்கு புறப்பட்டார். அவரும் முருகா மடம் வந்து சேர்ந்தார். தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு தீபாராதனையும் நடந்தது. பின்னர் தெப்பக்குளம் சந்திப்பில் சுவாமி அம்பாள் எதிரெதிரே நிற்க தோள் மாலை மாற்றும் நிகழ்வு நடந்தது. சுவாமி அம்பாளுக்கு பட்டுகள் மற்றும் பிரசாதங்கள் பரிமாறப்பட்டன. சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வந்து தோள் மாலை மாற்றப்பட்டது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சுவாமி அம்பாள் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகளை சுற்றி கோயில் வந்து சேர்ந்தனர். அங்கு இரவு 12 மணிக்கு திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.