பதிவு செய்த நாள்
01
நவ
2022
08:11
கடையநல்லூர்: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் தேரோட்டம் நடந்தது. பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் கடந்த ௨௩ம்தேதி கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன் தினம் நடந்தது. மாலையில், மலைக்கோயிலில் இருந்து சுவாமி மகாசூரனை சம்ஹாரம் செய்யஅழைத்து வரப்பட்டார். தொடர்ந்து வண்டாடும் பொட்டலில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் மகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று வண்டாடும் பொட்டலில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இந்தநிகழ்ச்சியில் விரதம் இருந்த பக்தர்கள் கும்பிடு சரணம் வழிபாடு நடத்தி, நேர்ச்சை செலுத்தினர். நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் கோமதி, டவுன் பஞ்., தலைவர் ராஜராஜன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம், கோயில் பணியாளர்கள், மண்டக படிதாரர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் பண்பொழி, கரிசல்குடியிருப்பு, கந்தசாமியாபுரம், செங்கோட்டை, அச்சன்புதூர், நெடுவயல், கொடிக்குறிச்சி, வடகரை, புளியரை, தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.