பதிவு செய்த நாள்
04
நவ
2022
10:11
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், பல நுாற்றாண்டுகளுக்கு பின், மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவில், பழமையான பண்ணிசை கருவியான, சகோட யாழ் இசைக்கப்பட்டது. ஏழாம் நுாற்றாண்டைச் சேர்ந்த அப்பர், திருஞான சம்பந்தர், 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சுந்தரர் ஆகிய மூவர் பாடியது தேவாரப் பாடல்கள்.
திருவாரூர், தியாகராஜர் கோவிலில் தினமும், அந்த பாடல்களை ஓதுவா மூர்த்திகள் பாடியதை கேட்டு ரசித்த ராஜராஜ சோழன், அந்த ஏடுகளை தேடிக் கொண்டிருந்தார். அப்போது, நம்பியாண்டார் நம்பி என்பவர், தேவார ஏடுகள், தில்லையில் இருப்பதாக கூற, ராஜராஜ சோழன் தேவாரப் பாடல் ஏடுகளை மீட்க, தில்லை சென்றார்.
முழு முயற்சி: அவருடன் சென்றவர்கள், சகோட யாழ் எனப்படும் பண்ணிசைக் கருவியை இசைத்தும், அங்கிருந்த அந்தணர்களிடம் பேசியும் தேவார ஏடுகளை மீட்டெடுத்தனர். தொடர்ந்து, தஞ்சாவூர் பெரிய கோவிலில் பல நுாற்றாண்டுகளுக்கு முன் வரை, சகோட யாழ் இசைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் அந்த இசைக் கருவியானது மறைந்து போனது. பழமையான சகோட யாழ் கருவியை, ஓதுவா மூர்த்திகளின் முயற்சியால், மீட்டுருவாக்கம் செய்து நேற்று, தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடந்த ராஜராஜ சோழன் சதய விழாவின் போது, ஓதுவார்கள் இசைத்து திருவீதி உலா எடுத்துச் சென்றனர்.
தஞ்சாவூர் பெரிய கோவில் ஓதுவாமூர்த்தி சிவனேசன் கூறியதாவது: இந்திய அறிவியல் அமைச்சகத்தின் சார்பில், பல்வேறு ஓதுவார்களுக்கு சகோட யாழ் குறித்து விழிப்புணர்வும், அதை இசைக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. தற்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து ஓதுவார்களின் முழு முயற்சியுடன் சகோட யாழ் கருவி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சகோட யாழை இசைக்க ஓதுவார்கள் முழு முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.