அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2022 07:11
அவிநாசி: ஆண்டு தோறும் ஒவ்வொரு தமிழ் மாத பௌர்ணமியன்று அன்றைய நட்சத்திரத்திற்குரிய பொருளால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பாக கருதப்பட்டு வருகிறது. அவ்வகையில் ஐப்பசி மாதம் பௌர்ணமியன்று அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய, அன்னத்தால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
சிவபெருமானுக்கு ஐப்பசி மாத பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் அன்னத்திற்கு பஞ்சமில்லாமல் நன்மை ஏற்படும் என்பது சிவாகமம் கூறும் ஐதீகம். சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல என்ற அடிப்படையில் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு அந்த அன்னத்தை சிவனின் பிரதிபிம்பமாக கருதப்படும் பக்தர்கள் உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அவ்வகையில்,அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் நேற்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டு அன்ன பிரசாதத்தை பெற்றுச் சென்றனர்.