பதிவு செய்த நாள்
10
நவ
2022
10:11
தஞ்சாவூர், காவிரி ரத யாத்திரை குழுவினர் நேற்று திருவையாறு வந்தனர். தொடர்ந்து, காவிரி புஷ்ப மண்டப படித்துறையில் சிறப்பு பூஜை நடந்தது.
நதியில் குப்பை, கழிவு கொட்டுவதை தவிர்த்தல், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் லட்சக்கணக்கான மரங்களை நடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய பாரதிய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், கடந்த, 22ம் தேதி கர்நாடகா மாநிலம் தலைக்காவிரியில் காவிரி ரத யாத்திரை தொடங்கி வரும், 13ம் தேதி பூம்புகாரில் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்த குழுவினர், அங்குள்ள காவிரி அன்னை சிலைக்கு மாலை அணிவித்து, ஆர்த்தி வழிபட்டனர். தொடர்ந்து ரதம் திருவையாறு வந்தது. அங்கு காவிரி புஷ்ப மண்டப படித்துறையில், காவிரி ஆற்றில் தண்ணீருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும், காவிரி அன்னைக்கு திரவியப்பொடி,பால்,மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.