பதிவு செய்த நாள்
10
நவ
2022
12:11
திருப்பூர் : ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஐயப்ப பக்த ஜனசங்கம் சார்பில், ஐயப்பன் கோவிலில், 63ம் ஆண்டு மண்டல பூஜை விழா, வரும் 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருப்பூர் ஸ்ரீஐயப்பன் கோவிலில், ஆண்டு தோறும் மண்டல பூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மண்டல பூஜை, 14ம் தேதி துவங்குகிறது. ஐயப்ப சுவாமி ஆறாட்டு விழா, 14ல் துவங்கி, 19ம் தேதி வரை நடக்கிறது. வரும், 14 ம் தேதி காலை கணபதி ேஹாமம், மாலையில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. மகா கணபதி ேஹாமம், நவகலச அபிேஷகம், 108 வலம்புரி சங்காபிேஷகம், பறையெடுப்பு, மகா விஷ்ணு பூஜை, உற்சவ பலிபூஜை, பகவதி சேவை, தாய்பகை மேளம், பள்ளிவேட்டை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
வரும், 19 ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, ஐயப்ப சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலுக்கு, ஆறாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். காலை, 11:00 மணிக்கு, சபரிமலை பிரதம தந்திரி கண்டரு பிரம்மஸ்ரீ மகேஷ் மோகனரு தலைமையில், வீரராகவப்பெருமாள் கோவில் குளத்தில், ஐயப்ப சுவாமி ஆறாட்டு விழா நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து, ஐயப்பசுவாமி ரத ஊர்வலம் துவங்குகிறது. முக்கிய வீதிகள் வழியாக சென்று, ரத ஊர்வலம் ஐயப்பன் கோவிலை சென்றடைகிறது. மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, 20ம் தேதி துவங்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், காலை, 11:30 மணிக்கு, கோவிலில் அன்னதானம் நடைபெற உள்ளது. மேலும், 15 முதல், 18ம் தேதி வரை, தினமும், 7:00 மணிக்கு பறையெடுப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீஐயப்பன் பக்த ஜனசங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர். மண்டல பூஜை துவங்க இருப்பதால், ஐயப்பன் கோவில் வளாகத்தில் நேற்று உழவாரப்பணி நடந்தது. திருப்பூர் சிவனடியார்களும், புண்ணியம் பூங்காவனம் அமைப்பினரும் இணைந்து, உழவாரப்பணி மேற்கொண்டனர்.