பதிவு செய்த நாள்
29
ஆக
2012
10:08
மேலூர்: இந்திய தொல்லியல் துறை, தமிழ்நாடு கனிம நிறுவன (டாமின்) அதிகாரிகளின் அமோக ஆதரவுடன், மதுரை மாவட்டம் கீழவளவில் உள்ள தொல்லியல் துறையின் புராதனச் சின்னமான பஞ்சபாண்டவர் மலையை, வெடி வைத்து தகர்த்து, கிரானைட் கொள்ளை நடந்ததை, அதிகாரிகள் நேற்று கண்டுபிடித்தனர்; இதற்குத் துணையாக உள்ள ஊழல் அதிகாரிகள், விரைவில் கைது செய்யப்பட உள்ளனர். இதை தடுக்காமல் விட்டிருந்தால், ஏழு நாட்களில் மலை முழுவதையும் விழுங்கி, ஏப்பம் விட்டிருப்பர்.
மதுரை மாவட்டம், கீழவளவில், 61 ஏக்கர் பரப்பளவில், இந்திய தொல்லியல் துறைக்குச் சொந்தமான பஞ்ச பாண்டவர் மலை உள்ளது. இங்கு சமணர்கள் படுகைகள், கற்சிலைகள், கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. மலை முழுவதும், "ரோஸ் நிறத்தில் ஏற்றுமதி தரம் வாய்ந்த கிரானைட் கற்கள் நிரம்பியுள்ளன. இம்மலை, தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. "மலையைச் சுற்றிலும், 300 மீட்டர் தூரம் ஆக்கிரமிப்புகள், அத்துமீறல்கள் இருக்கக் கூடாது. மீறுவோர் மீது, இந்திய தொல்லியல் சட்டப்படி, போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என, மலையை சுற்றிலும் ஏராளமான எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்திய தொல்லியல் துறையின், நில அளவை துறையின் சார்பில், எல்லைக் கற்கள் நடப்பட்டுள்ளன.
போலி டாமின் முத்திரை: பஞ்ச பாண்டவர் மலையின் அழகையும், கல்வெட்டுகளையும் காண, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட, ஏராளமானோர் வருவர். மலையின் அடிவாரத்தில், "டாமின் சார்பில் ஒரு நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டவும், விற்பனை செய்யவும், "லீஸ் எடுத்திருந்தது. இவர்கள், பஞ்ச பாண்டவர் மலையின் எல்லைக்குள்ளும், கைவரிசை காட்டத் துவங்கினர். இந்த அத்துமீறல்களை தொல்லியல் துறை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, நேரடியாக மலையை வெடி வைத்து தகர்த்து, கிரானைட் கற்கள் பகிரங்கமாக வெட்டி எடுக்கப்பட்டதை, தனிப்படையினர் நேற்று கண்டுபிடித்தனர். இம்மலையின் பெரும் பகுதியை, தற்போது காணவில்லை. கிரானைட் கற்கள், "டாமின் முத்திரையுடன் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெய்சிங் ஞான துரையின் விசாரணையில் நேற்று தெரிய வந்தது.
"ஊழல் அதிகாரிகள் பட்டியல்: மேலூர், திருவாதவூர், அரிட்டாபட்டி பகுதிகளில், சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. இம்மலைகள் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. எனினும், ஊழல் அதிகாரிகள் சிலரது முழு ஒத்துழைப்புடன், தேசிய அடையாளச் சின்னங்கள், விலை மதிக்க முடியாத புராதன மலைகள், தனிநபர் சுய லாபத்துக்காக, சிறுக சிறுக சுரண்டப்பட்டுள்ளன. இவற்றில், கீழவளவு சர்க்கரை பீர் மலை, பஞ்ச பாண்டவர் மலை, திருவாதவூர் மலைகள் அழிக்கப்பட்டுள்ளன. கனிம வளக் கொள்ளைக்கு துணை போன தொல்லியல் துறை, கனிம நிறுவனம், வருவாய் மற்றும் போலீஸ் துறையில் ஊழல் அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இவர்களை விரைவில் கைது செய்ய, கலெக்டர் அன்சுல்மிஸ்ரா துரித நடவடிக்கை எடுத்து வருகிறார்.