ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூரில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம், முதல் நாளிலிருந்து 48 நாட்கள் விரதத்தை கடைபிடிப்பது வழக்கம். இதற்காக நேற்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து மாலை அணிவார்கள். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்து, மாலையணிந்து விரதத்தை துவக்கினார். பின்னர் வைத்தியநாத சுவாமி, சிவகாமி அம்பாள், பெரிய மாரியம்மன், பழனி ஆண்டவர் உட்பட பல்வேறு கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். அங்கு ஐயப்பனின் சரண கோஷம் ஒலித்தது. மண்டல பூஜை முன்னிட்டு மடவார் வளாகம் ஐயப்பன் சன்னதியில் தினமும் சிறப்பு பூஜை வழிபாடுகள், மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.