சிவகாசி: சிவகாசியில் நேற்று ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கோயில்களில் மாலை அணிந்து, தங்களது விரதத்தைத் தொடங்கினர்.
ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதம் முதல் நாளன்று மாலை அணிந்து தங்களது விரத்தைத் தொடங்குவது வழக்கம். கார்த்திகை மாதம் துவங்கியதிலிருந்து 48 நாட்களுக்கு விரதம் இருந்து சபரி மலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிப்பர். அதன்படி நேற்று சிவகாசியில் ஐயப்பன் கோயில், முருகன் கோயில், சின்ன கருப்பாயி அம்மன் கோயில், விநாயகர் கோயில், ரிசர்வ்லைன் முருகன் கோயில், திருத்தங்கல் முருகன் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர். ஐயப்ப பக்தர்களுக்காக சிவகாசி பகுதியில் உள்ள முக்கிய கோயில்களில் காலை 5:00மணி முதல் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.