சேதமடைந்த 17ம் நூற்றாண்டு ஈஸ்வரன் கோயில் பூஞ்சாறு அரச வாரிசு தலைமையில் சீரமைக்க முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20நவ 2022 10:11
கூடலுார்: கூடலுாரில் 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஈஸ்வரன் கோயிலை பூஞ்சாறு அரச வம்சத்தை சேர்ந்த வாரிசு தலைமையில் சீரமைக்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று ஜோதிட பிரசன்ன நிகழ்ச்சி நடந்தது.
கூடலுார் தாமரைக் குளம் ரோட்டில் மிகவும் பழமை வாய்ந்த 17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலை பூஞ்சாறு அரச வம்சத்தை சேர்ந்த பூஞ்சாறு தம்பிரான் கட்டியதாக வரலாறு. இக்கோயிலுக்கு அருகில் தெப்பக்குளமும் இதற்குச் சொந்தமான நிலமும் உள்ளது. போர் நடந்த போது தம்பிரான் குடும்பத்தினர்கள் இப்பகுதியில் இருந்து வெளியேறி சென்ற பின் கோயிலையும் நிலத்தையும் அங்கு பூஜை செய்த சாமி என்பவரின் குடும்பத்தினர் பரம்பரையாக கவனித்து வந்துள்ளனர். ஆனால் இக்கோயில் முறையாக பராமரிக்கப்படாததால் கோபுரம், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள், கட்டடங்கள் அனைத்தும் சேதம் அடைந்து இடியும் நிலையில் உள்ளது. தமிழர்களின் கலைத்திறனை பிரதிபலிக்கும் சிற்பங்களுடன் கோயில் கோபுரம் அமைந்துள்ளது.
இக்கோயில் சீரமைத்து முறையாக பூஜை செய்து வந்தால் கூடலூர் மக்கள் செழிப்பாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில் இதனை சீரமைக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் இந்து சமய அறநிலைத்துறையினர் கோயிலை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்தது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில் பழமையான கோயிலை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதற்காக நேற்று பூஞ்சாறு அரச வம்சத்தைச் சேர்ந்த வாரிசு ஸ்ரீஜித் தலைமையில் ஜோதிட பிரசன்ன நிகழ்ச்சி நடந்தது. கேரளா சோட்டானிக்கரை பிரசன்ன ஜோதிடர் ரிஷிகேஷ், கோயில் அமைப்பு மற்றும் தோஷம் குறித்து விளக்கினார். கூடலுார் நன்மைக்காகவும் ஊர் மக்கள் செழிப்புடன் வாழ பூஞ்சாறு அரச வாரிசு தலைமையில் கோயிலை சீரமைப்பது என முடிவு செய்யப்பட்டது. அரச வம்சத்திற்கு பின் கோயிலை நிர்வகித்து வந்த சாமி குடும்பத்தின் வாரிசுகளும், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.