திருமால் தசாவதாரம் எடுத்தார். சீனிவாசனாக பூமிக்கு வந்து திருப்பதியில் கோயில் கொண்டார். அவர் கபிலர் என்னும் பெயரில் முனிவராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். முதல் மனிதராகக் கருதப்படும் ஸ்வாயம்புவ மநு, அவரது மனைவி தேவஹுதி ஆகியோருக்கு பிறந்தவர் கபிலர். இவர் சிறந்த ஞானியாக விளங்கினார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல, சாந்தமே உருவான திருமால், ஆவேசமாகி விட்டால் யாராலும் தாங்க முடியாது. ஒருமுறை, தன் ஆவேசத்தை வெளிப்படுத்த எடுத்த அவதாரம் இது. இவர் புகையற்ற நெருப்பின் நிறம் உடையவர். கைகளில் சங்கு, ஜபமணிமாலை இருக்கும். ராமபிரானின் முன்னோரான ஸகரன் மன்னனாக இருந்த போது, அஸ்வமேத யாகம் செய்தார். அவருக்கு 60 ஆயிரம் பிள்ளைகள். ஸகரன் அஸ்வமேத யாகம் செய்தபோது, அனுப்பப்பட்ட குதிரை காணாமல் போனது. அதைத் தேடி வந்த ஸகரனின் பிள்ளைகள் கபிலமுனிவர் அருகே அது நிற்பதைக் கண்டு, அவரே திருடியதாகக் குற்றம் சாட்டினர். கோபமடைந்த கபிலர் அவர்களைச் சாம்பலாக்கி விட்டார். பின் ஸகரனின் வம்சத்தில் பிறந்த அம்சுமான் என்பவன், இறந்து போன தன் மூதாதையர் நற்கதியடைய கபில முனிவரை வேண்ட அவரும் அருள்செய்தார்.