தசாவதாரம் நீங்கலாக, பெருமாள் எடுத்த சில அவதாரங்களில் ஒன்று வியாச அவதாரம்.வியாசம் என்றால் பகுத்தல். கட்டுரை எழுதும் மாணவர்கள் பகுதிபகுதியாக உபதலைப்பிட்டு எழுதுவர். அதனால் கட்டுரை நோட்டை வியாசநோட்டு என்று சொல்லும் வழக்கம் இருந்தது. வேதங்களைப் பகுத்து எழுதியதால், இவர் வியாசர் எனப்பட்டார். இவரது உண்மைப்பெயர் கிருஷ்ணதுவைபாயநர். தந்தை பராசர முனிவர், தாய் சத்யவதி. இவருக்கு பைலர், வைசம்பநாயர், ஜைமிதி, சுமந்து என்ற நான்கு சீடர்கள் இருந்தனர். இவர்கள் மூலம் வேதத்தை இவர் உலகில் பரப்பினார். பிரம்மமாகிய இறைவனை உணர்த்தும் பிரம்ம சூத்திரத்தை டங்கர், த்ரமிடர், போதாயநர் ஆகியோர் மூலம் பரப்பினார். மகாபாரதம், பாகவதம் ஆகியவற்றை எழுதி பாமர மக்களும் தர்மத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். இவரை எழுத்தாளர் அவதாரம் என்றும் சொல்லலாம். இவருக்கு கோபம் வந்ததில்லை. சாந்த சொரூபனாகத் திகழ்ந்தார்.