பதிவு செய்த நாள்
25
நவ
2022
02:11
பேரையூர்: பேரையூர் அருகே மோதகம் பகுதியில் கி.பி.16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.
மோதகம் கரையாம்பட்டி பூசாரி முத்துச்சாமி, தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக தகவல்தெரிவித்தார். மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முதுகலை வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி, ஆய்வாளர் அனந்தகுமரன், தமிழ்ச்செல்வம் ஆகியோர் களஆய்வு செய்தனர்.
முனீஸ்வரன் கூறியதாவது: பாண்டியர் காலத்தில் செங்குடி நாட்டின் எல்லைக்குட்பட்ட மோதகம் வேளாண்மை, வணிகம் செய்வதில் சிறப்பு பெற்றுஇருந்தது. மக்கள் வசிப்பிடம் இல்லாமல் அரசாங்க பதிவேட்டில் மட்டும் ஆவாரம்பட்டி, சுப்புலாபுரம், கரையாம்பட்டி, தாதமடம் கிராமங்களுக்கு தாய் கிராமம் என்ற பெயரில் மோதகம் உள்ளது. போரில் வீர மரணமடையும் வீரன் நினைவாக நடுகல் நடப்பட்டு காவல் தெய்வமாக தமிழ் சமூகம் வழிபடுகிறது. திருமங்கலம் - ராஜபாளையம் ரோட்டில் கரையாம்பட்டி விலக்கின் வடதிசையில் முட்புதரில் எழுத்துக்களுடன் நடுகல் கண்டறியப்பட்டது. 3 வரி கொண்ட எழுத்துக்கள் வானன் உட்பட்ட என்ற வரியை தவிர மற்ற எழுத்துக்கள் முற்றிலும் தேய்மானத்தோடு காணப்பட்டதால் அதன் பொருளை அறிய முடியவில்லை.
ஆண், பெண் சிற்பம்: நடுகல் 4 அடி உயரம் 2 அடி அகலம் கொண்டது. நடு கல்லில் ஒரு ஆண், பெண் சிற்பம் வலது காலை மடித்து இடது காலை நீட்டி அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுஉள்ளது. இருவரும் விசிறி வடிவில் ஐந்து மடிப்பு தொங்கும் விரிப்பின் மீது அமர்ந்துள்ளனர். ஆண் காலில் அணிந்திருக்கும் கழல் அவனது வீரத்தை பறைசாற்றுகின்றன.
காலை ஒட்டி வலது கையில் பிடித்துள்ள வாள் தரையை உரசிய வண்ணம் உள்ளது. இடுப்பிலிருந்து கழல் வரை இறுக்கமான ஆடை, இடுப்பில் கச்சையும் அணிந்துள்ளான். ஒட்டிய வயிற்றில் மடிப்பு, விரிந்த மார்பு, கழுத்தை ஒட்டி பதக்கம், இறுக்கமான முகத்தில் மீசை கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளது. தலையில் கொண்டை சற்று சரிந்த நிலையில் அது அவிழ்ந்து விடாமல் இறுக்கி கட்டி முடிந்துள்ளது. பெண் சிற்பம் ஆணின் வலது பக்கம் அமர்ந்து தன் தலைக்கு இணையாக இடது பக்கத்தில் பெரிய கொண்டை அலங்காரத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. முகம் தேய்ந்த நிலையில் ஒட்டிய வயிறு, இடுப்பில் பெரிய கச்சாடையும், பாதம் வரை ஆடையும் அணிந்துஉள்ளார். இச்சிற்பம் வெயில், மழையில் இருந்து பாதுகாக்க புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் கி.பி 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்தததாக இருக்கலாம். இச்சிற்பத்தை பார்க்கும்போது இப்பகுதியில் சிறப்பாக ஆட்சி செய்த குறுநில மன்னர் பரம்பரையை சேர்ந்தவருடையதாக இருக்கலாம். இவ்வாறு கூறினார்.