பதிவு செய்த நாள்
25
நவ
2022
11:11
தஞ்சாவூர், தேசத்தின் பெருமையை உலகறியச் செய்து, உலகளாவிய ராமகிருஷ்ண மடத்தை தோற்றுவித்த மகான் சுவாமி விவேகானந்தர். அவரது பிறந்தநாளான ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
சுவாமிஜியின் 160வது பிறந்தநாள் நிறைவு ஆண்டை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் தேசிய இளைஞர் தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தஞ்சாவூர், கும்பகோணம் பகுதி பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் தன்னம்பிக்கையோடு ஆற்றல் மிகுந்து வாழ்வதற்கு வழிகாட்டிய சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து பயன் பெற ஏதுவாக நிகழ்ச்சிகள் நடத்திட முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் ஆயிரம் வீடுகளில் வீடு தோறும் விவேகானந்தர் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கி நடத்திடுவது, தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இடையே கால் பந்தாட்ட போட்டி மாவட்ட ரீதியில் திருச்சியிலும், தஞ்சாவூரிலும் நடத்துவது, இணையதள முறையில் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி பல கல்லூரிகளில் இளைஞர் முகாம்கள் நடத்துவது, சிறப்பு சொற்பொழிவாக ஜனவரி 12, 13, 14 தேதிகளில் மகர் நோன்புச்சாவடி பெருமாள் கோவில், மேலவீதி காமாட்சி அம்மன் கோவில் மற்றும் தஞ்சாவூர் சிவாஜி நகர் ராமகிருஷ்ண மடம் ஆகிய இடங்களில் கோவிந்தபுரம் ஸ்ரீ பாலாஜி பாகவதர் சிறப்பு உபன்யாசம், சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.