பதிவு செய்த நாள்
26
நவ
2022
11:11
மயிலாடுதுறை: அர்ச்சகர்களில் பயிற்சி காலத்தை குறைத்ததற்கு தொன்மை வாய்ந்த தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோவில்களில் பூஜை செய்யும் அச்சகர்கள் 5 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும் என்பதை ஒரு ஆண்டு மட்டும் பயிற்சி பெற்றால் போதும் என்று விதிமுறைகளில் ஹிந்து சமய அறநிலையத்துறை மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதற்கு தொன்மை வாய்ந்த தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள். வேதம் அதன் ஒலியினுடைய சிறப்பில் அமைந்திருக்கிறது. ஆகமும் அதை கிரியாதியாக கொண்டு திகழ்கிறது. போதிய ஞானமும், ஒலி சிறந்த வேதியல் வேதமும், வேதியல் கேள்வியும் ஆவன இறைவனின் திருவடி பூஜை செய்வதற்கு உரியதும் பூஜையை ஏற்று அருள்பாளிக்கின்ற போது ஓதப்படுகின்ற வேதம் குறித்து அப்பர் அருகில் காட்டுகிறார். முப்போதும் திருமேனி தீண்டுவோர் அடியேன் என்று சுந்தரர் சொல்கிறார். முப்போதம் என்பது இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்பது எல்லாம் சிவ வேதியர்களுக்கு உரிய என்று சேக்கிழார் பெருமான் கூறுகிறார். சேக்கிழாரை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. ஒவ்வொன்றுக்கும் ஒரு தகுதி இருக்கிறது. அந்த தகுதியின்படி வந்தால் தான் அது செம்மையாக இருக்கும். ஒரு மரம் முளைப்பதற்கு வேத வித்து என்பார்கள். அந்த விதை போட்டால் முளைப்பதற்கு ஒரு வாரம் ஆகும்.
அது வளர்ந்து விருட்சமாகும். இன்றே விதை போட்டு உடன் மரமாக வேண்டும் என்றால் முடியாது. முதல் முதலாக தருமை ஆதீனத்தில் 24வது குரு மகா சன்னிதானம் ஆட்சி காலத்தில் நாடு வளம் பெற வேண்டுமென்றால் சிவாலய பூஜைகள் விடாமல் இருக்க வேண்டும். தடையின்றி நடைபெற வேண்டும். அதற்கு தகுதியானவர்கள் சிவாச்சாரியார்கள். சிவாச்சாரியார்களை உருவாக்கினால் நாடு நலம் பெறும், மன்னர் வாழ்வார், நல்லாட்சி செய்வார் என்று 1943 ஆம் ஆண்டு வேத சிவாகம பாடசாலை என்று தருமையாதீனத்தில் தொடங்கினார். அது முதல் தற்போது வரை 5 ஆண்டுகள் பயிற்சி பெற்றும், அதன் பிறகு 2 ஆண்டுகள் யாகசாலை பூஜை, கிரியா விதிகள் செய்வதற்கு என்று சிலர் பயிற்சி பெறுகின்றனர். 5 ஆண்டுகள் முடித்தால்தான் தகுதியானவர்களாக இருப்பார்கள். யாகசாலைக்கு இளம் கோயில் போன்று அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியது தருமை ஆதீனத்தில் தான். 25ஆவது குரு மகா சன்னிதானம் காலத்தில் சண்டி ஹோமம், சகஸ்ரநாமம், லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை முதலியவற்றை எல்லா இடங்களிலும் செய்து வைத்தார்கள். தேவார பாடசாலைக்கும் அதே போன்று 1943 ஆம் ஆண்டு தொடங்கி இப்போது 81 ஆண்டுகளாக இந்த ஆதீனத்தில் வேத சிவாகம பாடசாலை, தேவார பாடசாலைகள் செயல்படுகிறது. இதுபோன்று பல இடங்களில் பாடசாலைகள் அமைத்துள்ளனர். அங்கும் 5 ஆண்டுகள் குருகுலவாசமாக தங்கி பயிற்சி பெறுகின்றனர். உதாரணத்திற்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும் என வைத்திருக்கின்றனர். அதனை ஒரு மாதம் என்று மாற்ற முடியுமா அவர்கள் இஷ்டத்திற்கு மாற்றினால் ஒவ்வொன்றிலும் சிதைவு ஏற்பட்டுவிடும். மாணவர்களுக்கு கவனம் இருக்காது. 48 மாணவர்கள் தற்போது பயின்று வருகின்றனர். உணவு, உடை, இடம் கொடுப்பதோடு கலைக்கல்வியும் பயின்று வருகின்றனர். மேலும் அவர்கள் கல்லூரி படிப்பும் படிக்கலாம் .தேவார படிப்பில் ஓராண்டிற்கு 40 பதிகங்கள், 4 ஆயிரம் பாடல்கள் படிக்க வேண்டும். 5 ஆண்டுகளில் 20 ஆயிரம் பாடல்கள் படித்தால் தான் முழுமையான தகுதி பெறுகிறார்கள். 7 திருமுறைகளை எந்த இடத்தில் கேட்டாலும் ஒப்புவிப்பார்கள். தமிழகத்தில் இப்படி ஒரு சூழ்நிலை உருவாக்குவது வருத்தத்திற்கு உரியது. தகுதியை நாம் தான் ஏற்படுத்த வேண்டும். தகுதி இல்லாதவர்களுக்கு கொடுத்தால் சரியாக இருக்காது. சிறிய குழந்தையிடம் தங்க கிண்ணத்தையும், தேங்காய் ஓட்டையும் கொடுத்தால் அதற்கு எது முக்கியம் என்று தெரியாது. பல இடங்களில் ஓராண்டு முடித்தவர்கள் ஓதுவார்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பஞ்சபுராணம் கூட தெரியவில்லை. தகுதி அறிந்து முன்னோர்கள் வகுத்த வழியில் செல்வதுதான் நமக்கு சிறப்புடையதாக அமைந்துள்ளது. அதில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் அந்த நெறியிலேயே செல்ல வேண்டும் என்று ஆதீனத்தில் கொள்கையாக வெளிப்படுத்துகிறோம் என தெரிவித்தார்.