பதிவு செய்த நாள்
29
நவ
2022
08:11
சென்னை : வேதாந்தம் அன்று கண்ட, ராமஜென்ம பூமி கனவு இன்று நனவாகிறது, என, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் பேசினார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம் எழுதிய, மனதோடு பேசுகிறேன் என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில், ஆந்திராவில் இருந்து காணொலி வாயிலாக பங்கேற்ற, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் பேசியதாவது: பொதுவாழ்வுக்கு வரத்துடிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில், நாகரிகமான முறையில், மனதோடு பேசுகிறேன் நுாலை, வேதாந்தம் எழுதியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், தொழிலதிபர்கள், ஆதீனங்கள், ஜீயர்கள், முன்னாள் கவர்னர்கள், சட்டத்துறை வல்லுனர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று உள்ளனர். அதற்கு, வேதாந்தத்தின் சமூக, ஆன்மிக பணிகளே காரணம். தமிழகத்தில், பன்முக கலாசாரம் இருந்தாலும், ஒற்றுமையான புண்ணிய பூமி. இங்கு, ஓராசிரியர் பள்ளிகள் வாயிலாக கல்வி, மருத்துவ சேவையை, வேதாந்தம் செய்து வருகிறார்.
ஒரே பாரதம் தான்: உலகம் செழிக்க, ஹிந்து தர்மம் நிலைக்க வேண்டும். அதற்கு, நம்மிடம் ஒற்றுமை முக்கியம். உழைப்பும், ஒத்துழைப்பும் இருந்தால் தான் தர்மம் செழிக்கும் என, வேதம் சொல்கிறது. அனைவரையும் மதித்து, அனுசரித்து செல்வதை வேதாந்தம் செய்கிறார். இவரின் உழைப்பு, தற்போதைய கைலாஷ் மானசரோவரில் தெரிகிறது. இவர், பல ஆண்டுகளுக்கு முன், அசோக் சிங்கால் உடன், காஞ்சி பெரியவரிடம், ராமஜென்ம பூமிக்கான செங்கல்லை கொண்டு வந்து ஆசீர்வாதம் வாங்கினார். அது, தற்போது நனவாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பா.ஜ., முன்னாள் எம்.பி., சுப்பிரமணிய சுவாமி நுாலை வெளியிட, வேளாக்குறிச்சி ஆதீனம், திருப்புகளூர் மகாதேவ தேசிக பரமாச்சார்யர் பெற்றுக் கொண்டார். நுாலை வெளியிட்டு, சுப்பிரமணிய சுவாமி பேசியதாவது: யமுனை ஆற்றை சுத்தம் செய்வது குறித்த வழக்கில், நாளை உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலையில், இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். அதற்கு காரணம், நுாலாசிரியரின் நேர்மையும், உழைப்பும் தான். நம் நாட்டில், ஹிந்து தர்மத்தில் வடநாடு, தென்னாடு என்ற பேச்சே இருந்ததில்லை; ஒரே பாரதம் தான்.
ஆதிசங்கரர் தன்னை திராவிட சிசு என்கிறார். திராவிடம் என்றால், மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட நிலம் என்று பெயர். ஆனால், இங்கு அதை அரசியல் ஆதாயத்துக்காக, தனி இனம் என்று பொய் சொல்கின்றனர். நம் நாட்டில் பிற மதங்களின் வழிபாட்டு தலங்களுக்கு, எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், கோவில் கட்டுவதற்கும், வழிபாட்டுக்கும் நிறைய சிக்கல்கள் உள்ளன. தமிழகத்தில், கோவில்கள் மட்டும் தான் அரசின் கையில் உள்ளது. அவற்றை விடுவிக்க வேண்டும். அப்போது தான், ஹிந்துக்களின் வழிபாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கும். ஹிந்துக்கள், 80 சதவீதம் உள்ள நம் நாட்டில், ராமசேதுவை மீட்க முடியவில்லை. இப்போது தான் ராமஜென்ம பூமியும், காசியும் கைக்கூடி உள்ளது; விரைவில் கிருஷ்ண ஜென்ம பூமியும் மலரும். இவ்வாறு அவர் பேசினார்.
என்ன தவம் செய்தேனோ: தன் ஏற்புரையில், வேதாந்தம் பேசியதாவது: யசோதை, கண்ணன் அம்மா என்றழைக்க என்ன தவம் செய்தாளோ என்பது போல, நான் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் வாயிலாக கல்வி, மருத்துவம், சமூக, சமயப் பணிகளில் ஈடுபட என்ன தவம் செய்தேனோ. நான், 73 ஆண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இணைந்தேன். இப்போது வரை, ஹிந்து தர்மம் என்னை ஆட்டிப் படைக்கிறது. கோவில்களில் பூஜை செய்ய எந்த மாதிரியான பயிற்சி எடுக்க வேண்டும் என, தினமலர் நாளிதழில் கட்டுரை வெளியாகி உள்ளது. ஆனால், ஹிந்து தர்மத்துக்கு எதிரானோர் பூஜை முறைகளை பற்றி முடிவு செய்கின்றனர். அவர்களுக்கு கடவுள் நல்ல புத்தியை தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மேகாலய மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன், கோவை அங்காளபரமேஸ்வரி சித்தர்பீடம் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர், கண்ணந்தாங்கல் மங்களபுரி 108 சக்திபீடத்தின் நிறுவனர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.