நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ளது நித்யசுமங்கலி மாரியம்மன் கோயில் பெரும்பாலும் மாரியம்மன் கோயில்களில் விழாக்காலங்களில் மட்டுமே அம்பாளுக்கு எதிரே கம்பம் நடப்படும். இக்கம்பத்தை சுவாமியாகவே கருதி பூஜை செய்வர். ஆனால், இத்தலத்தில் அனைத்து நாட்களிலும் அம்பாளின் எதிரே கம்பம் நடப்பட்டு இருக்கிறது. அம்பிகை தினமும் கம்பத்தை பார்த்துக்கொண்டிருப்பதால் இவளை வணங்கி, வேண்டிக்கொள்ளும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார் என்பது நம்பிக்கை. இதனாலேயே இந்த அம்மனை நித்ய சுமங்கலி மாரியம்மன் என்று அழைக்கிறார்கள். கார்த்திகை தீபத் திருநாளன்று இந்த அம்பாள் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி தருகிறார்.