தற்போது பலரும் பேராசை என்னும் வலையில் சிக்கித்தவிக்கின்றனர். சிலர் இதில் சிக்குவதே இல்லை. இப்படி இருப்பவர்களிடம் ‘போதும் என்ற மனம்’ இருக்கும். தேவைகளை குறைத்தால் ஆசையும் குறையும். மனதில் அமைதியும் வலம் வரும். இதற்காக ஆசைப்படக்கூடாது என்று சொல்லவில்லை. அழகான வீடு, அன்பான குடும்பம் இருந்தால் போதும்தானே. இதுதான் உடல்நலத்திற்கும் நல்லது. எப்படி என்றால் ஒரு வீணையை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் நரம்புகள் முறுக்கேறினால் நல்ல இசை பிறக்கும். முறுக்கிக் கொண்டே போனால் நரம்பு இருக்காது. இதுவே நரம்புகள் தளர்ந்து இருந்தால் வீணையை மீட்டவே முடியாது. இப்படி வீணையில் நரம்புகள் தளராமலும், முறுக்கேறாமலும் இருந்தால் இன்னிசை பிறக்கும். நம் வாழ்க்கையும் ஒரு வீணைதான். இதில் ஆசை என்னும் நரம்புகள் சரியாக இருந்தால் இன்னிசை என்னும் இன்பம் பிறக்கும்.