ஆந்திராவில் உள்ள குர்ஜாடா என்னும் ஊரைச் சேர்ந்தவர் சேஷாசலசர்மா. ஒருமுறை இவர் மஹாபெரியவரை பொன் மலர்களால் பூஜிக்க எண்ணி மடத்திற்கு வந்தார். மலர்கள் இருக்கும் பொட்டலத்தை மஹாபெரியவரின் முன் வைத்து, ‘‘சுவாமி... சாதாரண மலர்கள் ஒரு நாளிலேயே வாடி விடும் என்பதால் தங்களைப் பூஜிப்பதற்காக வாடாமலர்களான பொன் மலர்களை இதில் வைத்திருக்கிறேன்’’ என்றார். ‘‘சரி... எதற்காக 111 மலர்களைக் கொண்டு வந்தாய்’’ எனக் கேட்டார் மஹாபெரியவர். ‘‘இல்லையே சுவாமி... அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய 108 மலர்கள் போதுமே’’ என்றார் சர்மா. சிரித்தபடியே ‘‘ நீயே எண்ணிப்பார்’’ என்று சொல்ல பரபரப்புடன் எண்ணினார் சர்மா. சரியாக 111 மலர்கள் இருந்தன. அதை அப்படியே மஹாபெரியவரின் பாதங்களில் சமர்ப்பித்து மகிழ்ந்தார். ஆனாலும் மூன்று மலர்கள் கூடுதலாக எப்படி இருந்தன என்று குழப்பம் ஏற்படவே மறுநாள் காலையில் பொற்கொல்லரைச் சந்தித்தார். ‘‘பொன்மலர்கள் சிறியதாக இருப்பதால் தவறுதலாக ஒரே நேரத்தில் இரண்டு மலர்களைச் சேர்த்து எடுக்க வாய்ப்புண்டு என்பதால் கூடுதலாக மூன்றைச் செய்தேன்’’ என்றார். சம்பந்தப்பட்ட நபருக்குக் கூட தெரியாத விஷயம் கூட ஞானியின் அகக்கண்களுக்குப் புலப்படும் என்பதை அறிந்து கண்ணீர் சிந்தினார். மற்றொரு சமயம் பக்தர்கள் சிலர் தங்கக்கிரீடம் செய்து மஹாபெரியவருக்கு அணிவித்து கொண்டாடினர். இதைக் கேள்விப்பட்ட சேஷாசல சர்மாவுக்கு தானும் அந்த கோலத்தில் சுவாமிகளை ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. அதன்பின்னர் ஒருமுறை மடத்திற்குச் சென்ற போது தலையில் கிரீடம், கழுத்தில் ருத்ராட்ச மாலைகள், தோளில் சால்வை அணிந்தபடி மஹாபெரியவர் அறையில் இருந்து வெளியே வந்து, ‘‘இப்போது உனக்கு திருப்திதானே’’ எனக் கேட்டார். திக்கு முக்காடிய சேஷாசல சர்மா வாயடைத்து நின்றார். தன் விருப்பத்தை நிறைவேற்றிய மஹாபெரியவரின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.