பதிவு செய்த நாள்
05
டிச
2022
08:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடந்த எட்டாம் நாள் தீப திருவிழாவில், சந்திரசேகரர், பிரம்மாவிற்கு காட்சியளித்து, வீதி உலா வந்தார்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவின் எட்டாம் நாள் விழாவில் நேற்று, விநாயகர் மற்றும் சந்திரசேகரர் (அருணாசலேஸ்வரர் நின்ற நிலை அலங்காரம்) தனித்தனி குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு, 16 கால் மண்டபத்தின் முன் ஒன்றாக எழுந்தருளினர். காலையில் நடந்த வீதி உலாவில், நேற்று முன்தினம், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், வீதி உலா வந்த மஹா ரதத்தை, இன்றி இனிதே ஓட்டி சென்ற பிரம்மாவுக்கு காட்சியளிக்கும் வகையில், மஹா ரதத்தின் முன், சந்திரசேகர் எழுந்தருளி பிரம்மாவுக்கு காட்சியளித்தார். பின், மஹா ரதத்தின் மீது மனிதர்களின் கால் பட்டு ஏறியதற்கு, வருத்தம் தெரிவிப்பதற்கான பரிகார பூஜை நடத்தப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பிச்சாண்டவர் அலங்காரத்தில், தங்கமேரு வாகனத்தில் மாடவீதி உலா வந்தார். இரவு பஞ்ச மூர்த்திகள் தனித்தனி குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தனர். இதனிடையே மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும், 1,150 மீட்டர் காடா துணியால் ஆன திரி, மேள தாளங்களுடன் மாடவீதி வலம் வந்து, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.