பதிவு செய்த நாள்
05
டிச
2022
08:12
சேலம்: சுக பிரம்ம ரிஷி குழுவினர், 10 ஆண்டில், 236 லிங்கங்களை மீட்டு பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். சேலத்தை சேர்ந்த சுக பிரம்ம ரிஷி குழுவினர், பழமையான சிவ லிங்கத்தை தேடி, கேட்பாரற்ற நிலையில் உள்ளவற்றை சீரமைப்பதை, 10 ஆண்டாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அக்குழுவை சேர்ந்த பக்தர்கள் செந்தில்குமார், சாமிநாதன் கூறியதாவது:
நம் மூதாதையர், சிவலிங்க வழிபாட்டின் முக்கியத்துவம் கருதி தினமும் ஆறுகால பூஜை, புஷ்ப அலங்காரம் என பல்வேறு வழிபாடுகளை செய்துவந்தனர். ‘லிங்க’ அபி ேஷகத்தால் குடியும், குடிசார்ந்த ஊர்மக்களும், நோய், நொடியின்றி மகிழ்ச்சியான வாழ்க்கை பயணம் மேற்கொள்வர் என்பது ஐதீகம். ஆனால், தமிழகத்தில் பல இடங்களில் சிவலிங்கங்கள் புதைந்து, சிதைந்தும் உள்ளன. லிங்கத்தை மீட்கவும், அங்குள்ள கோவில்களை சீரமைக்கவும் முடிவு செய்த, ‘சிவன்’ பக்தர்களால், சேலம் சுக பிரம்ம ரிஷி குழு ஏற்படுத்தப்பட்டது. 30 பேர் உள்ளனர். புதர் மண்டியுள்ள லிங்கங்களை மீட்டு பூஜை செய்து மீண்டும் விஷ ஜந்துகள் வராதபடி மூலிகை செடிகளை வைப்பது, மருந்து தெளிப்பது, பூஜைக்கு தண்ணீர், மின்வசதி என, எங்களால் முடிந்தவரை புனரமைப்பு பணி செய்கிறோம். அதன்படி சேலம், திருச்சி, செஞ்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, விழுப்புரம், விருதாசலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுவரை, 236 சிவலிங்கங்களை மீட்டு பூஜைக்கு வைத்துள்ளோம். அந்தந்த பகுதியில் பூஜை செய்ய விருப்பம் காட்டும் சிவ பக்தர்களிடம், பூஜை செய்ய அறிவுரை வழங்கி வருகிறோம். தொன்மையான, சிதிலமடைந்த லிங்கங்கள் குறித்து பக்தர்களுக்கு தெரிந்தால், அப்பகுதியில் ஒரு சிறு விளக்கை ஏற்றி வைப்பதோடு, எங்களை, 63820–99157 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், பணியாற்ற தயாராக உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.