பிரான்மலை: சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர சுயம்புலிங்கமாக காட்சிதரும் பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் 5வது சிறப்பை பெற்ற திருக்கொடுங்குன்றம் என்ற பிரான்மலை கோயில் பாதாளம், பூமி, ஆகாயம் என மூன்று நிலைகளில் அமையப்பெற்றுள்ளது. முதல் தளமான பாதாளத்தில் திருக்கொடுங்குன்றநாதர் குயிலமுதநாயகியும், பூமிதளத்தில் விசாலாட்சி விஸ்வநாதரும், கைலாயம் எனப்படும் ஆகாய தளத்தில் மங்கை பாகர் தேனம்மையும் காட்சி தருகின்றனர். மலை உச்சியில் வெற்றி விநாயகர், பாலமுருகன் கோயில்கள் உள்ளது. கார்த்திகையையொட்டி நேற்று பிரான்மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றுவதைக் காண பல்வேறு ஊர்களில் வந்திருந்த பக்தர்கள் காலை முதல் மலையேற தொடங்கினர். மாலை 5:00 மணிக்கு தீபதொட்டியில் எண்ணெய் ஊற்றப்பட்டு மலை தீபம் ஏற்றப்பட்டது. பாலமுருகன் குன்றில் பாலமுருகன் திருபேரவை சார்பில் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மலை தீபத்தை பார்த்து வணங்கிய பின்னரே சுற்று வட்டார மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றினர். அடிவாரத்தில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில், கரிசல்பட்டி கைலாசநாதர் கோயில், உலகம்பட்டி உலகநாதர் சுவாமி கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.