பதிவு செய்த நாள்
09
டிச
2022
12:12
மானாமதுரை, மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் தவ்வை உட்பட முற்கால பாண்டியர் கால சிற்பங்களை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கட்டிக்குளம் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் க.புதுக்குளம் சிவக்குமார் கள ஆய்வில் அழகிய நாயகி அம்மன் கோவிலின் வளாகத்தில் தவ்வை சிற்பம் உட்பட முற்கால பாண்டியர்களின் 6 சிற்பங்களை கண்டுபிடித்தனர். அவர்கள் கூறுகையில்,இங்கு 6 சிற்பங்கள் முறையே தவ்வை, சுகாசனமூர்த்தி, பெருமாள், பிராமி, மகேஸ்வரி, இந்திராணி போன்ற முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதை பார்க்கும்போது இவ்வூரில் மிகப்பெரிய சிவன் கோவில் இருந்திருக்க வேண்டும்.தவ்வை என்ற இந்த சிற்பத்திற்கு மூதேவி, மூத்ததேவி, தவ்வை, தூமாவதி, சேட்டைதேவி, முகடி, காக்கைகொடியாள்,மாமுகடி, போன்ற பல பெயர்களில் குறிப்பிடுவர்.
இந்த சிற்பம் இரண்டரை அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மூத்ததேவி சிற்பத்தின் வலது பக்கத்தில் மகன் மாந்தன் என்ற குளிகன் சிற்பம் இடம் பெற்றுள்ளது. மாந்தனின் தலையில் கிரீடம் தரித்தும் முகமானது மாட்டின் தலையை கொண்டும் மார்பில் முப்புரி நூலுடனும் வலது கரத்தில் ஆயுதம் ஏந்தியும் இடது கரத்தை தனது மடக்கிய இடது தொடையில் வைத்த படியும் வலது காலை கீழே தொங்கவிட்டு சுகாசன கோலத்தில் மாந்தன் சிற்பம் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது, சுகாசன மூர்த்தி என்பவர் 64 சிவ முகூர்த்தங்களில் ஒன்றாகும்.இந்த வடிவம் உமாதேவிக்கு சிவ ஆகமங்களின் பொருளை விளக்குவதற்காக தோன்றிய வடிவமாகும். கட்டிக்குளம் கிராமத்தில் மற்றுமொரு உள்ளரு பெருமாள் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிற்பம் 4அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் புடைப்புச் சிற்பமாக முற்கால பாண்டியர் காலத்தில் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது. மேலே கண்ட சிற்பங்கள் அனைத்தும் கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அழகிய நாயகி அம்மன் கோவிலில் தற்போது வழிபாட்டில் இருந்து வருகிறது.