பரமக்குடி பெருமாள் கோயில்களில் பாஞ்சராத்திர தீப விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2022 12:12
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் கார்த்திகை மாத பாஞ்சராத்திர தீப விழா நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பவுர்ணமி 2 ம் நாள் திருக்கார்த்திகை மகா தீப விழாவும், 3 ம் நாள் பவுர்ணமி திதியில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று பாஞ்சராத்ர தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதன்படி மகாவிஷ்ணு ஜோதி வடிவமாக தோன்றி உலகை காத்த நாள், விஷ்ணு கார்த்திகை நாளாக கொண்டாடப்படுகிறது.
* பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அலங்காரமாகினார். பின்னர் இரவு 7:00 மணிக்கு பெருமாள் புறப்பாடாகி, கோயில் முன்பு சிறப்பு தீபாராதனைகளுக்கு பின், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ரத வீதிகளில் வலம் வந்த பெருமாள் கோயிலை அடைந்தார்.
*பரமக்குடி அனுமார் கோதண்டராம சுவாமி கோயிலில் நேற்று மாலை ராமர் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பாஞ்சராத்திர தீப விழாவில், பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு தீப ஆராதனைகளுக்கு பின் கோயில் முன்பு சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் சில ஆண்டுகளில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் அன்று பவுர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரமும் இணையும் சமயம், ஒரே நாளில் சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.