பதிவு செய்த நாள்
09
டிச
2022
04:12
உலகளவில் பிரசித்தி பெற்ற விழாக்களில் மதுரையில் நடைபெறும் கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவமும் ஒன்று. பல நுாற்றாண்டு பாரம்பரியமாக நடக்கும் இவ்விழா பக்தர்களுக்கு நம்பிக்கையை மட்டுமல்ல, தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் பலலட்சம் பேர் திரளும் பிரமாண்ட விழாவாக நடைபெறும்.
ரூ.176 கோடி மேம்பாலம்: இந்த விழாவுக்கு மதுரையின் போக்குவரத்து நெருக்கடி தீர அமைய உள்ள மேம்பாலத்தால் பாதிப்பு ஏற்படும் என பக்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இப்பாலம் மதுரை மாநகராட்சி முன்பு துவங்கி தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம் சந்திப்பு, ஏ.வி., பாலம் வழியாக நெல்பேட்டை வரை ரூ.176 கோடி செலவில் மேம்பாலம் அமைய உள்ளது. இதன் பக்கவாட்டில் பீபிகுளம் பகுதியில் இருந்து நகருக்குள் செல்வோருக்கும், மேம்பாலத்தில் செல்வோர் செல்லுார் பாலம் ஸ்டேஷன் பகுதிக்கு இறங்கும் வகையிலும் இரு துணை பாலங்கள் அமைய உள்ளன. இப்பாலங்களின் மொத்த நீளம் 3.2 கி.மீ., அகலம் 12 மீட்டர். இது மாநகராட்சி பகுதியில் இருந்து மதுரை நகருக்குள் செல்லும் வகையில் ஒருவழிப்பாதையாக அமையும்.
இந்நிலையில் இது மேம்பாலமாக அமையும் பகுதியில் மாநகராட்சி முதல் தமுக்கம் வரை தேனுார், குலமங்கலம், ராமராயர், ராமநாத சேதுபதி உட்பட 35க்கும் மேற்பட்ட திருக்கண் மண்டபங்கள் உள்ளன. சித்திரைத் திருவிழாவின் போது, அழகர்கோவிலில் இருந்து வரும் கள்ளழகர் இந்த திருக்கண் மண்டபங்களில் தங்கி செல்வார். அப்போது பல ஆயிரம் பக்தர்கள் அங்கு திரண்டு இருந்து அழகரை தரிசனம் செய்வர். அழகர் வரும்போதும், திரும்பிச் செல்லும்போதும் எதிர்சேவை, பூப்பல்லக்கு என நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
முதல்வரிடம் மனு: இப்பகுதியில் பாலம் அமைவதால் இந்த திருக்கண் மண்டபங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மண்டபதாரர்கள் கருதுகின்றனர். இதுதொடர்பாக ஆலோசனை செய்த அவர்கள், தமுக்கம் பகுதியில் இருந்து துவங்கும் வகையில் அமைத்தால் இவ்விழாவுக்கு பாதிப்பு ஏற்படாது என கூறுகின்றனர். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் மண்டபதாரர்கள் சங்க தலைவர் மோகன், செயலாளர் திருமால்ராஜன், பொருளாளர் பிரபாகரன் மனு கொடுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், இப்பாலத்தால் மண்டபம் இருக்கும் பகுதியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கடந்த ஆட்சியில் இப்பாலத்தை தமுக்கம் பகுதியில் துவங்கும் வகையில் திட்டமிட்டனர். தற்போது மாநகராட்சி அருகில் துவங்குவதாக உள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.