பதிவு செய்த நாள்
09
டிச
2022
05:12
அன்னூர்: ஓரைக்கால் பாளையத்திலிருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். ஓரைக்கால் பாளையத்தில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில், ஒருவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதம் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, சபரிமலைக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, கடந்த நவ. 17ம் தேதி 200 பக்தர்கள் மாலை அணிந்தனர். கடந்த 4ம் தேதி செண்டை மேளம், வானவேடிக்கையுடன், ஐயப்பன் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் படி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரவு ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அலங்கார பூஜை, அபிஷேக பூஜை நடந்தது. அப்பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ், மணிகண்டன், கார்த்திக் ஆகிய மூன்று ஐயப்ப பக்தர்கள் சைக்கிளில் 360 கி.மீ., தொலைவில் உள்ள சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.