பதிவு செய்த நாள்
16
டிச
2022
07:12
மதுரை: அதிகாலையில் தெருக்களை அலங்கரித்த வண்ண கோலங்கள், பஜனை முழக்கங்கள் என, இந்தாண்டு உற்சாகமாக மார்கழி மாதம் துவங்கி விட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தெருக்களில் வெண்ணிற அரிசி மாவு உட்பட பல்வேறு வண்ணங்களில், அழகிய கோலங்கள் இடப்படுகின்றன. அதிகாலையில் வண்ணக் கோலங்களும், பஜனை முழக்கங்களுமாக மார்கழி களைகட்டியுள்ளது. அதிகாலை முதல் அனைத்து பெருமாள் மற்றும் சிவன் கோயில்களில், திருப்பாவை, திருவெம்பாவை முழங்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மார்கழியில் அதிகாலையில் வீசும் குளிர்ந்த சுத்தமான காற்று சுவாசத்திற்கு ஏற்றது. இறைவன் மீதான பஜனை பாடல்களை பாடவும், கேட்கவும், மாசில்லாத இயற்கை காற்றை சுவாசிக்கவும் கிடைக்கும் அரிய வாய்ப்பு, இந்த மாதத்தில் தான் வாய்க்கிறது.மார்கழி கோலத்தின் சிறப்பு, சாணம் தெளித்து கோலமிட்டு அதன் மேல் பூசணி பூ வைப்பது தான். அதனால், கிருமிகள் அகன்று நோய் தொற்று பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. ஆனால், இன்று ஒரு சில கிராமங்களில் மட்டுமே, பூசணி பூ கோலத்தை பார்க்க முடிகிறது.பெரும்பாலான பெண்கள், அதிகாலையில் நீடிக்கும் அடர்த்தியான பனி பொழிவு மற்றும் மர்ம நபர்களின் நகை பறிப்பு காரணமாக, முன் இரவிலேயே கோலம் போட்டு விடுகின்றனர்.