அன்னூர்: மார்கழி மாதம் இன்று பிறப்பதை முன்னிட்டு அன்னூர் வட்டாரத்தில் உள்ள கோவில்களில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடக்கிறது.
மாதங்களில் நான் மார்கழியாய் இருப்பேன் என பகவான் கிருஷ்ணர் கூறியதால் மார்கழி மாதம் போற்றுதலுக்குரிய மாதமாக உள்ளது. இந்த மாதத்தில் இறைவனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. அன்னூர் வட்டாரத்தில், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவில், மன்னீஸ்வரர் கோவில், பொங்கலூர் வெங்கடேச பெருமாள் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், பொகலூர் பெருமாள் கோயில், வரதையம்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவில், ஓரைக்கால் பாளையம் ராமர் கோயில் ஆகிய கோவில்களில் இன்று அதிகாலையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இன்று துவங்கி மார்கழி மாதம் முடியும் வரை அதிகாலையில் சிறப்பு வழிபாடும் திருப்பாவை, திருவெம்பாவை பாடுதலும் நடக்கிறது.
மார்கழி மாத பிறப்பையொட்டி உடுமலை பெரியகடைவீதி நவநீதகிருஷ்ணபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.