பிள்ளையார்பட்டியில் தனுர் மாத பூஜை துவக்கம்: அதிகாலை கூடுதல் நேரம் நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2022 02:12
பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் மார்கழி மாத பிறப்பை அடுத்து அதிகாலை தனுர் மாத பூஜை நடைபெறுவதுடன், பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு கூடுதல் நேரம் நடை திறக்கப்படுகிறது.
பிள்ளையார்பட்டி கோயிலில் வழக்கமாக காலை 6:00 மணிக்கு நடை திறந்து காலை 6:30 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து திருவனந்தால், காலை 8:00 மணிக்கு காலச்சந்தி, காலை 11:00 மணிக்கு உச்சிக்கால பூஜைகள் நடந்து மூலவருக்கு அபிேஷகம் நடந்து காலை 1:00 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 5:30 மணிக்கு சாயரட்சை, இரவு 7:30 மணிக்கு அர்த்தசாமம் பூஜைகள் நடந்து இரவு 8:30 மணிக்கு நடை சாத்தப்படும். கார்த்திகை பிறப்பை அடுத்து சபரிமலை அய்யப்ப பக்தர்கள், பழனி முருக பக்தர்களின் வசதிக்காக நவ. 17 முதல் மதியம் நடை சாத்தாமல் சாமி தரிசனம் தொடர்ந்தது. இன்று மார்கழி பிறந்து திருப்பள்ளி எழுச்சி கோயில்களில் துவங்குகிறது. இதனையடுத்து இக்கோயிலில் ‛கூடுதல் பக்தர்கள் வருகையை முன்னிட்டு அதிகாலையில் முன்னதாக நடை திறக்கப்பட்டு கூடுதல் நேரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது’ என்று பரம்பரை அறங்காவலர்கள் கண்டனுர் என்.கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் சி.சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் அறிவித்துள்ளனர். இன்று கோயில் நடை அதிகாலை 3:00 மணிக்கு திறக்கப்பட்டு, அதிகாலை 4:00 மணிக்கு திருவனந்தால், அதிகாலை 5:00 மணிக்கு தனுர்மாத பூஜை நடைபெறும். தொடர்ந்து காலச்சந்தி,உச்சிக்காலம்,சாயரட்சை,அர்த்தசாம பூஜைகள் நடைபெறும். இரவு 8:30 மணிக்கு மேல் நடை சாத்தப்படும்.