பதிவு செய்த நாள்
17
டிச
2022
03:12
அன்னூர்: அன்னூர் ஐயப்பன் கோவில் திருவிழா இன்று வாஸ்து பூஜை உடன் துவங்குகிறது. அன்னூர், ஸ்ரீ ஐயப்பன் கோவில் மற்றும் நஞ்சுண்ட விநாயகர் கோவிலில் 53ம் ஆண்டு திருவிழா இன்று மாலை 6:00 மணிக்கு வாஸ்து பூஜையுடன் துவங்குகிறது. வருகிற, 18ம் தேதி அதிகாலையில் முதற்கால வேள்வி பூஜையும், காலை 6:00 மணிக்கு கொடியேற்றமும், மாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. 19ம் தேதி பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்த கலசம் கொண்டு வருதலும், இரவு மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. 20ம் தேதி காலை 6:00 மணிக்கு ஐயப்பனுக்கு, பால், தயிர், சந்தனம், பன்னீர், நெய் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது, இதையடுத்து அலங்கார பூஜை நடக்கிறது. மாலையில் ஈரோடு ராஜனின் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. வருகிற 21ம் தேதி மதியம் 1:30 மணிக்கு செண்டை மேளம், ஜமாப், ஐயப்ப பக்தர்களின் பஜனை உடன் யானை மற்றும் புலி வாகனத்தில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா நகரின் முக்கிய வீதிகளில் வழியாக நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.