Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » சேய்த் தொண்டர்
சேய்த் தொண்டர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 ஆக
2012
01:08

பெண்ணை ஆறு பாய்ந்து வளம் சேர்த்ததால் ஏகத்துக்கும் செழிப்புற்றிருந்தது அன்றைய திருமுனைப்பாடி எனும் நாடு. அந்த நாட்டின் ஒரு பகுதியான இன்றைய திண்டிவனம் சோலைகளும் மாளிகைகளும் நிரம்பிய ஒரு நகரமாகத் திகழ்ந்தது. சங்க காலத்தில் ஒய்மா நாட்டு நல்லிக்கோடன் என்ற சிற்றரசன் ஆட்சி புரிந்த கிடங்கில் என்ற பெருநகரின் பகுதியே இன்றைய திண்டிவனம்.

நல்லியக்கோடர், நாகர் வகுப்பில் ஒரு பிரிவினரான ஓவியர் குடியில் பிறந்தவர். திண்டிவனம்- திண்டீச்சுரம் சிவாலயத்திலுள்ள கல்வெட்டு ஒன்று ஒய்மா நாட்டுக் கிடங்கை நாட்டு கிடங்கிலான இராசேந்திர சோழ நல்லூர் திண்டீச்சுவரம் என்று குறிப்பிடுகிறது. எனவே, இன்றுள்ள திண்டிவனமே பண்டைகால கிடங்கில் என்ற பெரு நகரத்தின் ஒரு பகுதி எனலாம். மூன்று நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட நல்லியக்கோடர், இந்தக் கிடங்கிலைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர். அதற்கு ஆதாரமாக இந்த ஊரில் சிதைந்த அகழியும், இடிந்த கோட்டையும் காணப்படுகிறது.

நல்லியக்கோடர் மிகச்சிறந்த முருக பக்தர். மக்களிடம் பேரன்பு செலுத்தும் நல்ல இதயமும், தமிழ் உணர்வும், நாட்டை ஆளும் பேராற்றலும் நிறைந்த மன்னர். தம்மிடம் பொருள் கேட்டு வரும் புலவர்களுக்கு அவர்கள் விரும்பியதை அளித்து மகிழும் உத்தமக் கொடையாளர். பேகன் முதலிய கடையெழு வள்ளல்களுக்கும் காலத்தால் பிந்தியவர். இவரைப் போன்ற பெருங்கொடையாளி ஒருவரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவரும் இவரைப் போற்றியுள்ளனர்.

முருகக் கடவுள் பேரருளால் மிகச் சிறந்த முறையில் அரசாண்ட இந்த அரசனது கொடைத் தன்மை, அரசியல் திறமை போன்ற அருமை பெருமைகள் மற்ற நாடுகளிலும் பரவின. இவரது புகழையும்  ஆற்றலையும் கேள்வியுற்ற தொண்டை நாட்டு பல்லவ அரசன், இவரை போரில் எதிர்த்து தோல்வியுற்றான். இதைப் போல் சேரமன்னன், சோழ அரசன் ஆகியோரும் இவருடன் போரிட்டு இவரை வெல்ல முடியாமல் திரும்ப ஓடினர்.

அதேநேரம், தோல்வியுற்ற மன்னர்கள் ஒன்று கூடினர். நல்லியக்கோடரை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினர். விரைவில் அவரது நாட்டின் மீது படையெடுத்தனர், இந்தச் செய்தியை ஒற்றர் மூலம் அறிந்த நல்லியக்கோடர் தமது யானை, குதிரை, தேர், காலாட்படை முதலிய அனைத்துப் படைகளையும் போர்க்களத்துக்கு அனுப்பினார். எதிர்த்து வந்த மன்னர்களது பெரும் படையுடன் நல்லியக்கோடரது நால்வகைப் படைகள் போரிட்டன. வெற்றி யாருக்கு என்ற நிலையில் பகைவர்களின் படை முன்னேறத் தொடங்கியது. ஒற்றர்கள் இந்தச் செய்தியை நல்லியக்கோடரிடம் தெரிவித்தனர். அதைக் கேட்டு சற்று அதிர்ச்சியானவர். முருகப்பெருமானிடமே முறையிட்டார்.

தொழுது வழிபடும் அடியார்களை காத்திடும் பெருமானே! கலியுக வரதா! கருணைக் கடலே! உன் அடியவனான என்னைப் பகைவர்கள் சூழ்ந்துள்ளனர். உம்மை அடைக்கலம் புகுந்தேன்! குன்றுதோறாடும் குமரா! எனது குடி முழுதும் ஆண்ட மாமணியே! திரிபுரம் எரித்து அனைவரையும் காத்தருளிய அறக்கடவுளின் அன்பு மகனே! உன் அடிமையாகிய எனக்கு உடனே அருள்புரி! பகைவர்களை புறமுதுகிட்டு ஓடும்படி செய்யும் வழியே எனக்குக் காட்டி அருள்வாய்! எனக்கு அருள்புரியாவிட்டால் நான் உணவருந்த மாட்டேன்! இது உம் திருவடி மீது ஆணை! என்று விரதம் கொண்டு முருகப் பெருமான் சன்னிதியில் வீழ்ந்து உறக்கம் கொண்டார்.

கனவில் வந்தவர் கருணை வள்ளல் கந்தவேள், தாமரை மலர்கள் உள்ள பொய்கை ஒன்றைக் காட்டினார். அதிலுள்ள பூவைப் பறித்து பகைவர் மேல் வீசி எறியுமாறு கூறி மறைந்தார். விடிவதற்காகக் காத்திருந்தார் நல்லியக்கோடர் விடிந்ததும் படைகள் சூழ, தான் கனவில் கண்ட பொய்கைக்குச் சென்றார். இதனிடயே பகைவர்களின் படை கிடங்கில் மாநகரைச் சுற்றி வளைத்தது. அவர்களை விரட்டியடிக்க அடைக்கலம் காட்டிய பொய்கையில் இருந்து ஒரு மலரைப் பறித்து வேல் மயில் ... என்று பலமுறை கூறி பகைவர் மேல் வீசி எறிந்தார் நல்லியக்கோடர், என்னே அற்புதம்! பூவின் இதழ் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலாக மாறி பகைவரைத் தாக்கி அழிக்கத்  தொடங்கியது. வேலின் ஆற்றலைக் கண்ட எதிரிகள் சிலர் தேரின் அடியில் ஓடி ஒளிந்தனர். சிலர் மண்ணைக் கவ்வினர்; சிலர் கதறி வீழ்ந்தனர். கால் இழந்து, கை இழந்து, கண் இழந்து... இப்படிப் பலர் பதைபதைத்து ஓலமிட்டனர். பகைவர் படை பயந்து புறமுதுகிட்டு ஓடியது.

முருகப் பெருமான் அருளால் நல்லியக்கோடர் வெற்றி முகத்தோடு அரண்மனையை அடைந்தார், தன்னிடம் அடைக்கலம் என்று வீழ்ந்த பகை மன்னர்களை மன்னித்து அவர்களை உயிரோடு திருப்பி அனுப்பினார்.  ஆறுமுகப்பெருமான் அருளால் வேலின் ஆற்றலால் இவர் பெற்ற வெற்றியை உணர்ந்தனர் பகை அரசர்கள். தமது தவறை உணர்ந்து மீண்டும் நல்லியக்கோடருடன் நட்புரிமை பாராட்டினர். நடந்து முடிந்த போரில், கந்தவேள் கருணையை மாத்திரமே நம்பிய நல்லியக்கோடர், தமக்கு தீங்கு செய்தவர்களையும் மன்னித்து அவர்களது அரச வாழ்வை திரும்ப அளித்தார். நல் இதயம் மிக்கவர் அல்லவா நல்லியக்கோடர்? சங்ககால இலக்கியமான சிறுபாணாற்றுப் படையில், நல்லியக்கோடரது பெருமைகளை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்ற புலவர் சிறப்பாகப் பாடியுள்ளார். நல்லியக்கோடர் பரம்பரையில் வந்தவர்கள் ஒய்மா நல்லியாதான். ஒய்மா வில்லியாதான் என்ற பெயர் கொண்டவர்கள். இந்த அரசரது மற்ற ஊர்கள் எயிற்பட்டினம், மாவிலங்கை, வேலூர் போன்றவை.

எயிற்பட்டினம் என்பது இன்றுள்ள மரக்காணமே என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். மரக்காணத்தை அடுத்து கடற்கரை செல்லும் வழியில் பூமிச்வரர் என்ற கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வடகிழக்கில் மணற்குன்றுகள் காணப்படுகின்றன. அந்த மணற்குன்றுகள் உள்ள இடத்தில்  பழைய எயிற்பட்டினம் இருந்து காலப்போக்கில் அழிந்திருக்கலாம் என்கிறார்கள். மேலும், அங்கு கடலில் உயர்ந்த மேட்டு நிலப் பகுதி இருப்பதாகவும், கடலில் மீனவர்கள் வலை வீசும்போது வலையில் உள்ள இரும்பு குண்டுகள் பட்டு ஏறத்தாழ இருபது அடி ஆழத்தில் வெண்கல ஓசை எழுகிறது எனவும், கோபுரம் போன்ற உயர்ந்த கட்டடங்கள் தெரிவதாகவும் அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டாம் குலோத்துங்கன் காலத்துக்கு பிறகு காலப்போக்கில் எயிற்பட்டினம் ஆழ்ந்திருக்கலாம்.

திண்டிவனத்துக்கு வடக்கில் சுமார் 10. கி.மீ தொலைவில் தெள்ளாறு செல்லும் வழியில் உள்ள மேல் மாவிலங்கை மற்றும் கீழ் மாவிலங்கை ஆகிய சிற்றூர்களே முற்காலத்தில் மாவிலங்கை என்ற ஒரே ஊராகத் திகழ்ந்ததாம். இந்த ஊருக்கு சிறிது மேற்கில் ஒரு சிவன் கோயில் இருந்து காலப் போக்கில் அழிந்துவிட்டது. நல்லியக்கோடர் பொய்கையில் இருந்து மலர் பறித்து எறிந்த இடம் தற்போது உப்பு வேலூர் என்ற பெயரில் மரக்காணத்துக்கு தென் மேற்கில் உள்ளது. இந்த ஊரில் உள்ள திருஅக்கீச்வரம் என்ற கோயிலில் ஒய்மா நாட்டு மணி நாட்டு வேலூர் என்ற குறிப்புடன் காணப்படும் கல்வெட்டு முதலாம் ராஜேந்திரன் காலத்தைச் சேர்ந்ததாகும்.

முத்தமிழ் முருகனின் உத்தம பக்தனான நல்லியக்கோடர் பல காலம் நன்கு அரசாண்டு, இறுதியில் கந்தன் கழலடி நிழலை அடைந்தார்.

படைப்பல மிக்க தெவ்வு
பட ஒரு பூவை வேலாய்
விடுத்தி டென்று அஞ்சல் தந்து
வேலவன் கனவிற் சொல்லிக்
கொடுத்திடச் சென்று வென்ற
நல்லியக் கோடன் என்ற
கொடைக்கையான் மாவிலங்கைக்
கொற்றவன் நற்றாள் வாழி.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar