பதிவு செய்த நாள்
23
டிச
2022
08:12
சபரிமலை:மண்டல பூஜைக்கு முன்னோடியாக நேற்று கற்பூர ஆழி பவனியில் சபரிமலை சன்னிதானம் ஜொலித்தது. தங்க அங்கி இன்று காலை ஆரன்முளாவில் இருந்து புறப்படுகிறது.
நடப்பு ஆண்டின் மண்டலகாலத்தின் நிறைவாக டிச., 27 மதியம் மண்டல பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இதன் முன்னோடியாக நேற்று மாலை தீபாராதனைக்கு பின் தேவசம்போர்டு ஊழியர்களின் சார்பில் கற்பூர ஆழி பவனி நடந்தது. கொடிமரம் அருகே வட்ட வடிவ பாத்திரத்தில் கற்பூரங்களை குவித்துவைத்து அதில் தந்திரி கண்டரரு ராஜீவரரு நெருப்பு வளர்த்தார்.
தொடர்ந்து பாத்திரத்தின் இரண்டு பக்கமும் உள்ள கம்பியைபிடித்து இரு பக்கமும் அசைத்த போது கற்பூர ஜூவாலை வானத்தை நோக்கி உருண்டு உருண்டு சென்றது. தொடர்ந்து சிவன், பார்வதி பிரம்மா, விஷ்ணு, ராமர், சீதை, அனுமன் வேடமணிந்தவர்கள் அணிவகுக்க புலி வாகனம் மீது ஐயப்பன் வேடமணிந்த சிறுவன் அமர்ந்திருக்க அதனை பக்தர்கள் சுமந்து வந்தனர். இதில் சரணகோஷமிட்டவாறு ஏராளமான பக்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். மண்டல பூஜை நாளில் ஐயப்பன் சிலையில் அணிவிக்கும் தங்க அங்கி பவனி இன்று காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்படுகிறது. டிச.,26 மதியம் பம்பை வந்த பின் மாலையில் தலைச்சமையாக சன்னிதானம் கொண்டுவரப்படும். அன்று தீபாராதனையின் போதும், டிச., 27 மதியம் மண்டல பூஜையின் போதும் இந்த அங்கி ஐயப்பன் சிலையில் அணிவிக்கப்பட்டிருக்கும். டிச.,26 தங்க அங்கி வருகையை ஒட்டி பம்பையில் இருந்து பக்தர்கள் மலை ஏறுவதில் சிறிது நேரம் கட்டுப்பாடுகள் இருக்குமே தவிர அன்று மதியம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று வெளியாகும் தகவல் தவறானது. மண்டல பூஜை நாளில் பக்தர்கள் எண்ணிக்கை 40 ஆயிரமாக சுருக்கப்பட்டுள்ளது என்பதும் தவறானது, கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.