பதிவு செய்த நாள்
22
டிச
2022
08:12
சபரிமலை: சபரிமலையில் மண்டலபூஜைக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இன்றும், நாளையும்(டிச.,22, 23) கற்பூரஆழி பவனியும், நாளை(டிச.,23) ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி புறப்பாடும் நடக்கிறது.
கேரள மாநிலம், சபரி மலையில் உள்ள அய்யப்பன் கோவிலில், நவ.,17-ல் தொடங்கிய இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. டிச.,27 மதியம் நடக்கும் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். மண்டல பூஜை டிச.,27 மதியம் 12:30 முதல் 1:00 மணிக்குள் நடைபெறும். இந்த நேரத்தில் அய்யப்பன் விக்ரகத்தில் அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் வழங்கிய தங்க அங்கி, நாளை காலை ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்படுகிறது. இது, டிச.,26 மாலை சன்னிதானம் வந்தடையும். தங்க அங்கி பம்பை வந்த பின், பக்தர்கள் மலை ஏற அனுமதி நிறுத்தப்படும். அங்கி மாலை 3:00 மணிக்கு மரக்கூட்டம் கடந்த பின்னரே, பம்பையில் இருந்து பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும். மண்டல பூஜைக்கு முன்னோடியாக நடைபெறும் கற்பூர ஆழி பவனி இன்று தேவசம்போர்டு சார்பிலும், நாளை போலீஸ் துறை சார்பிலும் நடக்கிறது. இதையொட்டி பக்தி பண்பாட்டு பேரணி இரு நாட்களுக்கு மாலை தீபாராதனைக்கு பின் நடைபெறும். இது, சன்னிதானம் கொடிமரம் அருகே தொடங்கி மாளிகைப்புறம் கோயில் சென்று 18ம் படிக்கு கீழே நிறைவு பெறும். நேற்று மதியம் வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மதியத்துக்கு பின் சற்று குறைந்தது. பக்தர்கள் காத்திருப்பின்றி தரிசனம் செய்தனர்.