பதிவு செய்த நாள்
24
டிச
2022
08:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம் பச்சை பரத்தலை ஆண்டாள், ரெங்கமன்னார் பார்வையிடும் வைபவத்துடன் துவங்கியது.
இதனை முன்னிட்டு நேற்று மாலை 04:45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பட்டனர். அவர்களை வேதபிரான் சுதர்சன் ஆடிப்பூர பந்தலில் எதிர்கொண்டு வரவேற்று, ஆண்டாள் பிறந்த வீடான வேதபிரான் திரு மாளிகைக்கு அழைத்து வந்தார். அங்கு பச்சை பரத்தலை பார்வையிட்ட ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோயில் யானை முன் செல்ல, ராஜகோபுரம் வழியாக வட பத்திர சயனர் சன்னதியில் உள்ள கோபால விலாசம் மண்டபத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் எழுந்தருளினர். அங்கு அரையர் சேவை, திருப்பல்லாண்டு, திருவாராதனம், கோஷ்டி நடந்தது. பின்னர் நள்ளிரவில் ஆண்டாள், ரெங்கமன்னார் மூலஸ்தானம் திரும்பினர். விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். ஜனவரி 1 வரை தினமும் காலை 10:00 மணிக்கு மேல் கோபால விலாசத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள, பகல் பத்து உற்சவம் நடக்கிறது. ஜன.2. காலை 6:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.