பதிவு செய்த நாள்
24
டிச
2022
08:12
சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் 18 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜெயந்தி விழா நேற்று முழுவதும் நடந்தது. காலை 5 மணிக்கு ராமபிரானுக்கு சோடச அபிஷேகமும் தொடர்ந்து 7 மணிக்கு மேல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஆயிரம் லிட்டர் பால், தயிர், வெண்ணை, தயிர், இளநீர், எலுமிச்சை, அரிசி மாவு, பழச்சாறு, கரும்புச்சாறு, குங்குமம், சந்தனம், களபம், ஜவ்வாது, திருநீறு, பன்னீர், தேன் உட்பட 16 விதமான பொருட்களால் சோடஷ அபிஷேகமும் நடந்தது. மாலை ஆறு மணிக்கு துளசி, மல்லிகை, முல்லை அல்லி, ரோஜா, வாடாமல்லி, தாமரை உள்ளிட்ட பலவித வண்ண புஷ்பங்களால் சுவாமிக்கு கழுத்தளவு நிறையும் விதத்தில் புஷ்பாபிஷேகம் நடந்தது. காலை முதல் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் சுவாமியின் பிரசாதமான லட்டு, வடை ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. கோவில் கலையரங்கத்தில் பக்தர்களுக்கு காலை 9.30 மணி முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு தடை இல்லாமல் சென்று சுவாமியை தரிசனம் செய்யும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகர், கோயில் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர்ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் உட்பட பக்தர்கள் செய்திருந்தனர்.