அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2022 09:12
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
கோவை மாவட்டம், அன்னூரில் மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும் மன்னீஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் சிவபெருமான், லிங்க ரூபத்தில் மேற்கு நோக்கி வீற்றிருப்பது தனி சிறப்பாகும். மன்னர்களாலும், அருளாளர்களாலும் வழிபடப்பட்ட பெருமை உடையது. இக்கோவிலில் 23ம் ஆண்டு தேர்த் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு, கணபதி ஹோமம் நடந்தது. மன்னீஸ்வரர், முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. காலை 9:45 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து அருந்தவ செல்வி உடனமர் மன்னீஸ்வரர் கோவில் உட்பிரகாரத்தில் கயிலை வாத்தியத்துடன் உலா வந்தார். இதன் பிறகு சுவாமி திருவீதி உலா, தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு வழியாக சென்று மதியம் மீண்டும் கோவிலை அடைந்தது. புளியம்பட்டி 63 அருட்பணி மன்றம் சார்பில், திருமறை ஓதப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வருகிற ஜன. 1ம் தேதி வரை தினமும் மாலையில் சுவாமி திருவீதியுலா நடக்கிறது. ஜனவரி 2ம் தேதி காலை சுவாமி திருக்கல்யாண உற்சவமும், 3ம் தேதி காலை 11:00 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.