பதிவு செய்த நாள்
29
டிச
2022
09:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மாணிக்கவாசகர் உற்சவம் தொடங்கியது.
மார்கழி மாதத்தில் சிவன் கோவில்களில் நடக்கும் முக்கிய வழிபாட்டில் ஒன்று திருவாதிரை நட்சத்திரத்தில் நடக்கும் ஆருத்ரா தரிசனம். இது வரும், ஜன., 6ல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம், 10 நாட்கள் நடக்கும். இந்த விழா நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு அருணாலேஸ்வரர் கோவிலில் இரண்டாம் பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதி முன், தனி வாகனத்தில் மாணிக்கவாசகர் எழுந்தருள, திருவெம்பாவை பாடல்கள், காலை, மாலை என இருவேளைகளிலும் பாடப்படும். பின்னர் காலை, மாலை இரு வேளைகளிலும், மாடவீதி உலா நடக்கும். விழா கடைசி நாளான, ஜன., 6ல் சிவகாமி அம்மன், நடராஜ பெருமான், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து, ஆருத்ரா தரிசன நிகழ்வு நடக்கும். அப்போது, மஹா தீப மை சிவகாமி அம்மன் மற்றும் நடராஜர் சுவாமிக்கு, முதலில் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கும். தொடர்ந்து, சுவாமி, அம்மன் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.