உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்: ஜன.,5ல் மரகத நடராஜருக்கு மகா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2022 11:12
உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சுவாமிக்கு சந்தன காப்பு களைதல் நிகழ்ச்சி ஜன.,5ல் நடக்கிறது.
ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மரகத நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் களையப்பட்ட அபூர்வ சுவாமி தரிசனத்திற்காக பல லட்சம் பக்தர்கள் வருகின்றனர். விழாவின் துவக்கமாக நேற்று இரவு 7:00 மணிக்கு கோயில் முன் உள்ள நர்த்தன விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தினமும் காலை 10:00 மணிக்கு மாணிக்கவாசகரின் உள் பிரகார வீதியுலாவுடன் திருவெம்பாவை பாடப்படுகிறது. ஜன.,5 காலை 8:00 மணிக்கு மேல் கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேக, ஆராதனை நிறைவேற்றப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடக்கிறது. கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தரும் நிகழ்ச்சியும், மறுநாள் ஜன.,6 அதிகாலை 5:30 மணிக்கு அருணோதய நேரத்தில் சுவாமியின் திருமேனியில் புதிய சந்தன காப்பிடுதல் நடக்கும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.