பதிவு செய்த நாள்
03
செப்
2012
11:09
மதுரை : மதுரையில், செப்.,19 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நகரில் இந்தாண்டு மூன்று நாட்கள் மொத்தம் 107 விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நடக்கிறது. இதற்காக 36 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. செப்.,19ல் சிவசேனா, செப்.,20ல் இந்து மக்கள் கட்சி, செப்.,21ல் இந்து முன்னணி சார்பில் மொத்தம் 107 விநாயகர் சிலைகளின் ஊர்வலம் நடக்கிறது. மாசிவீதிகள் வழியாக கொண்டு வரப்பட்டு, யானைக்கல் பகுதியில் வைகையாற்றில் கரைக்கப்படுகிறது. இதற்காக இந்து முன்னணி சார்பில், மூன்றடி முதல் 11 அடி வரையுள்ள 108 விநாயகர் சிலைகள், சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுப்படாத வகையில் பேப்பர் மோல்டு, தேங்காய் நாறு, உருளை கிழங்கு மாவினால், இச்சிலைகள் தயாரிக்கப்படுகிறது. இந்து முன்னணி சார்பில், சிக்கந்தர்சாவடியில் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. கடந்தாண்டை போல், இந்தாண்டும் ஊர்வலத்திற்கும், சிலை வைப்பதற்கும் போலீசார் 36 கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிட்டுள்ளனர். சிலை வைத்திருக்கும் இடத்தின் உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற வேண்டும். சிலை பாதுகாப்பு கமிட்டி அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். தீயணைப்பு கருவிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒலிபெருக்கிகளை தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே உபயோகிக்க வேண்டும். ஊர்வலத்தின்போது கலர் பொடி தூவக்கூடாது. பட்டாசு வெடிக்கக்கூடாது. அனுமதி பெறாத சிலைகளை ஊர்வலத்தில் கொண்டு வரக்கூடாது. சிலைகளை எந்த வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது என்பது முன்கூட்டியே போலீசிற்கு தெரிவிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.