பதிவு செய்த நாள்
29
டிச
2022
10:12
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் முக்கோடி தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கல்கருட சேவை நடந்தது.
108 திவ்ய தேசங்களில் 20-வது தலமாகவும், பன்னிரு ஆழ்வார்களுல் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கு சீனிவாசபெருமாளே நேரில் ஆச்சாரியனாய் வந்து பஞ்சமஸ்காரம் செய்வித்த தலமாகவும் விளங்குவது நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை பங்குனி பெருவிழா மற்றும் முக்கோடி தெப்பத் திருவிழாவின் போது கல்கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு கடந்த 26 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதியுலா நடைபெறுகிறது. இதில் நான்காம் நாள் விழாவான உலக பிரசித்திபெற்ற கருடசேவை நடைபெற்றது. மாலை 6 மணியளவில் கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சன்னதியிலிருந்து முதலில் நான்குபேர், அடுத்து 8 பேர், 16 பேர், 32 பேர், 64 பேர் என கருடபகவானை சுமந்து வந்தனர். கருடபகவான் மண்டபம் எழுந்தருளியோது ஏராளமான பக்தர்கள் குழுமியிருந்தனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த கருடசேவையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் வெளிப்புறமும், உள்புறமும் காத்திருந்து தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு கருடபகவான் மீது பெருமாளும், அன்னபட்சி வாகனத்தில் தாயாரும் சன்னதிக்குள் சென்றனர். இதையடுத்து எட்டாம் நாள் விழாவான் வரும் ஜன. 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பும், 3ம் தேதி தெப்பத்திருவிழாவும், 5ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது.